டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இன்று (ஆகஸ்ட் 25) அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா வீடு உள்பட 32 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
அதில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் சிபிஐ விளக்கம் அளித்தது.
பேரம் பேசும் பாஜக!
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ’ஆம் ஆத்மி கட்சியை உடைக்கும் முயற்சி’ என்று குறிப்பிட்டார்.
சிபிஐ விசாரணையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், ஆம் ஆத்மியை விட்டு விலகி, தங்கள் கட்சியில் இணைய பாஜக தன்னிடம் விலை பேசுவதாக மனீஷ் சிசோடியா தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கத்தை கவிழ்க்க தனக்கு 20 கோடி வழங்குவதாக கூறியது என அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சவுரப் பரத்வாஜும் கருத்து தெரிவித்தார்.
மாயமான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்!
இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கு இந்த தகவலை தொலைபேசியில் சொல்ல முயற்சித்தபோது, பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே மூலம் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
அதே பாணியை தற்போது தனக்கு போட்டியாக வளர்ந்து வரும் ஆம் ஆத்மி கட்சியை அடக்க பாஜக திட்டமிட்டுள்ளது என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை : அலறும் ஆம் ஆத்மி – பீதியில் திமுக அமைச்சர்கள்!