தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ரூ.100 கோடிக்கு பேரம் பேசி பாஜகவுக்கு மாற இடைத்தரகர்கள் மூலம் நடத்திய உரையாடல் வீடியோக்களை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், கடந்த மாதம் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ரூ.100 கோடிக்கு பேரம் பேசி பாஜகவிற்கு அணி தாவ டெல்லியை சேர்ந்த மூன்று இடைத்தரகர்கள் பேரத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இடைத்தரகர்கள் டிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாஜக கட்சிக்கு வர பேரம் பேசும் வீடியோவை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இடைத்தரகர் சதீஷ்சர்மா, பாஜகவிற்கு வந்தால் சட்டமன்ற உறுப்பினர் ரோகித் ரெட்டிக்கு ரூ.100 கோடியும் மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.50 கோடியும் தருவதாக கூறும் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர் ராவ், “இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்கள், ஏற்கனவே தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசு எனது தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது.
ஜனநாயகமற்ற முறையில் எனது அரசை ஏன் கவிழ்க்க முயற்சி செய்கிறீர்கள்? நாட்டின் நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
செல்வம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்திய அணிக்கு சிக்கல்!