என்னை கைது செய்தது சட்டவிரோதம்: நீதிமன்றத்தில் கவிதா
அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்று பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதா இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு டெல்லியில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஏழு முறை சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சௌத் குரூப் தொழிலதிபர்கள் குழு மதுபான உரிமம் வாங்குவதற்காக ரூ.100 கோடியை ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
செளத் குரூப்பில் அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி, , சந்திரசேகர் ராவ் மகள் கவிதா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.பி. முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா, சரத் ரெட்டி ஆகியோர் பிரதிநிதிகளாக உள்ளனர்.
இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகளும், பாரத் ராஷ்டிரிய சமிதி மூத்த தலைவருமான கவிதாவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 5.20 மணிக்கு அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து விசாரணைக்காக கவிதாவை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று இரவு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், கவிதாவை 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்காக டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்தனர்.
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கவிதா இன்று ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை கைது செய்தது சட்டவிரோதம். சட்டப்போராட்டம் நடத்தி நான் வெளியே வருவேன்” என்று தெரிவித்தார்.
கவிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலங்கானாவில் இன்று பிஆர்எஸ் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறும்போது, “அரசியல் ஆதாயத்திற்காக கவிதாவை கைது செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
பொதுவாக அமலாக்கத்துறை வரும் பின்னர் மோடி வருவார், ஆனால், நேற்று இருவரும் ஒரே நேரத்தில் வந்துள்ளனர். இது மலிவான அரசியல் தந்திரம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் தடை? : ரகுபதி பதில்!
Rohit Sharma: கேப்டன் ‘பதவியில்’ இருந்து நீக்கிட… உண்மையான காரணம் இதுதான்!