திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடைய மகனும் தற்போதைய வேலூர் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த், தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கி விட்டார்.
பிப்ரவரி 29ஆம் தேதி மின்னம்பலத்தில், துரைமுருகன் மகனுக்கு சீட்டு உண்டா? என்ற தலைப்பில் எலக்ஷன் ஃபிளாஷ் பகுதியில் செய்தி வெளியிட்டிருந்தோம் அதில்,
“கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனாலும் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனுடைய மகனுக்கே சீட்டு தரவில்லை என்றால் அது வேறு மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தும்.
எனவே கதிர் ஆனந்துக்கு சீட்டு கொடுத்துவிடலாம் என்று முதலமைச்சர் முடிவெடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தோம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர் தொகுதிகளில் இருக்கும் திமுகவின் ஒன்றிய, நகர செயலாளர்களை, நிர்வாகிகளை வீடு வீடாக தேடிச் சென்று சந்தித்துள்ளார் கதிர் ஆனந்த்.
அப்போது அவர், ‘மறுபடியும் நான் தான் வேட்பாளராக போட்டியிடப் போறேன். இதுவரைக்கும் மனசுல என்ன இருந்தாலும் அதை விட்டுருங்க. எனக்காக வொர்க் பண்ணுங்க’ என்று கதிர் ஆனந்த் வேண்டுகோள் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் மார்ச் 3ஆம் தேதி அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிளைச் செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார்,
‘வேலூர் மக்களவைத் தொகுதியில் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இதை தலைவர் என்னிடம் சொல்லிவிட்டார். அதை நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
வேட்பாளர் பட்டியல் வரும்போது அதை தலைவர் முறைப்படி அறிவிப்பார்’ என்று கூறி கதிர் ஆனந்துக்கு வேலை செய்யுமாறு நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.
இது மட்டுமல்லாமல் நேற்று மார்ச் 5ஆம் தேதி மதியம் மாவட்டச் செயலாளர் நந்தகுமார், வேலூர் அனுகூலா ஹோட்டலில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து நிர்வாகிகளையும் வரவழைத்து விருந்து வைத்திருக்கிறார்.
இந்த விருந்து நிகழ்வில் பேசிய கதிர் ஆனந்த், ‘தலைவர் எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நான் தலைமைக்கும் உங்களுக்கும் விசுவாசமாக இருப்பேன்’ என உருக்கமாக பேசியிருக்கிறார்.
இந்த விருந்தோடு பூத் செலவுக்கும் சுவர் விளம்பரம் செய்வதற்கும் முதல் கட்டமாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 6) விருப்ப மனு கொடுப்பதற்காக அறிவாலயம் செல்கிறார் கதிர் ஆனந்த். அப்போது தன்னுடன் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
கடந்த தேர்தலின்போது தனக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட கசப்புணர்வை மீண்டும் இப்போது சந்தித்து விடக்கூடாது என்பதில் கதிர் ஆனந்த் தெளிவாக இருப்பதாக கூறுகிறார்கள் திமுக வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
ஒரேயடியாக உச்சம் தொட்ட தங்கம்… ஒரு கிராமின் விலை இதுதான்!
’மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றியை சிலாகித்த வெங்கட் பிரபு, பா.ரஞ்சித்