வேலூர் எம்.பி-யும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில தலைவருமான கதிர் ஆனந்த் தனது 50 ஆவது பிறந்த நாளை நேற்று ஜனவரி 19ஆம் தேதி கொண்டாடினார்.
ஜனவரி முதல் வாரத்தில் வேலூர் அருகே இருக்கும் காட்பாடி இல்லத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில்… துபாயில் இருந்து அதன் பிறகு திரும்பிய கதிர் ஆனந்த் இந்த வருடம் தனது 50ஆவது பிறந்த நாளை காலை முதல் மாலை வரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நடத்தியிருக்கிறார்.
காலை 9 மணி முதல் மாலை வரை வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அத்தனை திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பல பிரமுகர்களை நேரில் அழைத்து பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

வேலூர் மாவட்ட திமுகவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு இந்நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் கதிர் ஆனந்த் என்கிறார்கள் வேலூர் திமுகவினர்.
இதுகுறித்து வேலூர் திமுக வட்டாரத்தில் பேசியபோது,
“கதிர் ஆனந்தின் 50வது பிறந்த நாளை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் வேலூர் எம்பி தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் இருக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் துரைமுருகனே போன் போட்டிருக்கிறார்.
‘தம்பிக்கு 50 ஆவது பிறந்தநாள். நீங்க எல்லாம் வந்து வாழ்த்த வேண்டும்’ என்று துரைமுருகன் உரிமையோடு அழைத்திருக்கிறார்.

பொதுச்செயலாளர் அழைத்த பிறகு ஒன்றிய, நகர செயலாளர்கள் தட்ட முடியுமா? அதனால் அனைவரும் தங்களது ஆதரவாளர்களோடும் மற்ற நிர்வாகிகளோடும் காட்பாடி இல்லத்திற்கு திரண்டு வந்து கதிர் ஆனந்தை வாழ்த்தியிருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளர் சாரதி. இவர் ஆற்காட்டைச் சேர்ந்த தொழிலதிபர். இவர்தான் கதிர் ஆனந்த் பிறந்தநாளை ஒட்டி அத்தனை பேருக்கும் மட்டன் பிரியாணி மற்றும் அசைவ விருந்து வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மேலும் நிர்வாகிகள் சிலர் ஒன்று சேர்ந்து பத்து சவரன் தங்கச் செயினை கதிர் ஆனந்துக்கு பரிசாக அளித்தார்கள்.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி விஸ்வநாதன் அமைச்சர் துரைமுருகனின் நீண்ட நாள் நண்பர் என்ற அடிப்படையில் கதிர் ஆனந்தின் வீட்டுக்கு வந்து அப்பா, மகன் இருவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்தி சென்றார்.
வேலூர் எஸ்பி மதிவாணன் ஏற்கனவே இம்மாவட்டத்தில் பணியாற்றியவர். கதிர் ஆனந்த் தான் அவரை வேலூர் மாவட்ட எஸ்பியாக இங்கே அழைத்து வந்தார். எஸ்.பி.மதிவாணன் கதிர் ஆனந்தத்தின் பிறந்தநாள் விழா கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக இரண்டு டிஎஸ்பிக்கள் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 40லிருந்து 50 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினார்.
துரைமுருகனின் குடும்ப சாமியாரான மகா தேவமலை மகானந்த சித்தர், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ரத்தனகிரி பாலமுருகன் அடிமை ஆகிய ஆன்மீக பெரியவர்களும் கதிர் ஆனந்தை வந்து ஆசீர்வதித்து சென்றார்கள்.
துரைமுருகனின் மிக நெருங்கிய நண்பரான எம்பி ஜெகத்ரட்சகன் வந்து வாழ்த்தினார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் காந்தியும் வந்து வாழ்த்தினார். அதேபோல தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும் சென்னையில் இருந்து காட்பாடி வந்து கதிர் ஆனந்தை வாழ்த்தி சென்றார். வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் பிரம்மாண்ட சீர்வரிசையோடு வந்து கதிர் ஆனந்தை வாழ்த்தினார். குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலு விஜயனும் வந்து கதிர் ஆனந்தை வாழ்த்தினார்.

இவ்வளவு அரசியல் புள்ளிகள், ஆன்மீகப் புள்ளிகள் திமுக நிர்வாகிகள் கதிர் ஆனந்தை வாழ்த்தினாலும்… வேலூர் திமுக மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார் கதிர் ஆனந்தை சந்தித்து வாழ்த்தவில்லை.
அவர் மட்டுமல்ல அவரது மாவட்டத்தில் இருக்கும் ஒன்றிய செயலாளர்கள் இருவர் சபரிமலைக்கு சென்று விட்டதால் வர முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அவரது ஆதரவு நிர்வாகிகள் கூட மந்திராலயம் போய்விட்டோம், திருப்பதி போய்விட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இருவரையும் வைத்துக்கொண்டு ஒரு கட்சி நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நந்தகுமார், ‘பொதுச் செயலாளர் துரைமுருகனின் அரசியல் வாரிசு நான்தான்’ என்று பேசினார். இதற்கு பதிலடியாக குடியாத்தத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கதிர் ஆனந்த், ‘பொதுச்செயலாளர் துரைமுருகன் வழியில் நான் செயல்பட்டு வருகிறேன்’ என்று பேசி இருந்தார்.

கதிர் ஆனந்தை எம்பி ஆக்கிய துரைமுருகன் அடுத்ததாக கட்சி ரீதியாக வேலூர் மாவட்ட செயலாளராக தனது மகனை ஆக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினிடமும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்ட திமுகவில் கதிர் ஆனந்துக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே, 50வது பிறந்தநாள் விழாவை திட்டமிட்டு நடத்திக் காட்டியிருக்கிறார் துரைமுருகன்.
மாவட்ட செயலாளர் பதவியை அடைவதற்காகவே கதிர் ஆனந்த் திட்டமிடுகிறார் என்பதை உணர்ந்துதான் இப்போதைய மாவட்ட செயலாளர் நந்தகுமார், இந்த பிறந்தநாள் விழாவை தவிர்த்து விட்டார். இதுதான் இப்போதைய வேலூர் மாவட்ட அரசியல்” என்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘இதுதான் உண்மையான ஆசிர்வாதம்’- சீக்ரெட் சொல்லும் சாய்பல்லவி
புகார் கொடுத்த ஏழாவது நாளில் சமூக ஆர்வலர் விபத்தில் பலி… சந்தேகம் எழுப்பும் எடப்பாடி, அண்ணாமலை