சம்மன் மேல் சம்மன்… ED அலுவலகத்தில் ஆஜரான கதிர் ஆனந்த்

Published On:

| By Selvam

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று (ஜனவரி 22) ஆஜரானார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், ரூ.12 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டது.

அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியும் கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை. இதனால், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் வீடு, அவரது குடும்பத்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, துரைமுருகனின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கதிர் ஆனந்தின் கல்லூரி வளாகத்தில் இருந்து சுமார் ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில், ஜனவரி 22-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து கதிர் ஆனந்த் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், கதிர் ஆனந்த் தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகவில்லை.

இதற்கிடையில், நேற்று (ஜனவரி 21) அமலாக்கத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்ட அந்த ரெய்டின் போது சுமார் ரூ.14 கோடி கைப்பற்றப்பதாகவும், மேலும் பல ஆவணங்களும் ஹார்ட் டிஸ்க்குகளும் கைப்பற்றப்பட்டதாகவும் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டன.

இந்தநிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவது தொடர்பாக துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் நேற்று (ஜனவரி 21) மாலை முதல் இரவு வரை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது வழக்கறிஞர்கள் கதிர் ஆனந்த் ஆஜராவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக நேற்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டுள்ளோம்.

ஆனால், கதிர் ஆனந்த் வட்டாரங்களோ, நாளை (ஜனவரி 22) விசாரணை தேதி குறித்துவிட்டு இன்று (ஜனவரி 21) இதுபோன்ற தகவல்களை அமலாக்கத்துறை பரப்பி வருகிறது.

2019-இல் ஐடி சோதனை செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட பணத்தையும் சேர்த்து தான் ரூ.14 கோடி என அமலாக்கத்துறை வட்டாரத்தினர் தகவல்களை பரப்புகிறார்கள். அன்று சுமார் ரூ.12 கோடி கைப்பற்றப்பட்டபோது, அந்த பண்டல்களில் கிங்ஸ்டன் கல்லூரியில் பயன்படுத்தப்படும் காகிதங்கள் சுற்றப்பட்டிருந்ததாகவும், அந்த அடிப்படையில் இப்போது கல்லூரியில் கைப்பற்றப்பட்ட பணத்தையும் சேர்த்து ரூ.14 கோடி என அமலாக்கத்துறை பரப்பி வருகிறது என்று கூறுகிறார்கள்.

இந்தநிலையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share