கச்சத் தீவு… கடற்கரைத் தொகுதிகளில் ‘இறங்கி’ வேலை செய்யும் பாஜக

அரசியல்

சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் திடீரென கச்சத்தீவு பிரச்சினையைக் கிளப்பினார்கள்.  ஏப்ரல் 10 ஆம் தேதி வேலூரில் பேசிய பிரதமர் மோடி கூட கச்சத்தீவு விவகாரம் பற்றி குறிப்பிட்டார்.

கச்சத்தீவை தமிழ்நாட்டில் திமுகவும், இந்தியாவில் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தபோது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்றும் அதனால்தான் மீனவர்கள் இன்று வரை பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என்றும் பாஜகவினர் கூறி வருகிறார்கள்.

அதற்கு திமுக, காங்கிரஸ் சார்பில், ‘கச்சத் தீவு பற்றி பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் திடீரென மோடி பேசுவதை மீனவ மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று பதிலளிக்கப்பட்டது.

இப்படி இது கருத்துத் தளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜகவின் மீனவர் பிரிவுக்கு டெல்லியில் இருந்து ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கி ராமநாதபுரம் வரையிலான அனைத்து கடலோர தொகுதிகளுக்கும் சென்று மீனவர் பிரிவு பிரதிநிதிகளையும், மீனவர்களையும் சந்தித்து கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதால்தான் மீனவர் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற பிரச்சாரத்தை துண்டுப் பிரசுரம் மூலம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

அதன்படியே கடந்த வாரம் முழுவதும் தமிழக பாஜகவின் மீனவர் பிரிவு செயலாளர் நீலாங்கரை முனுசாமி தமிழகம் முழுவதும் சென்று மீனவர்களை சந்தித்துள்ளார்.

அவரிடம் பேசியபோது, “எதிர்க்கட்சிகள் இதை ஏதோ அறிக்கைக்கான பொருளாகவும் பேசி முடித்துவிடும் விஷயமாகவும் பார்க்கிறார்கள். ஆனால் இது மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினை.

8 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

அதனால்தான் காங்கிரஸ், திமுகவினர் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த துரோகத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அனுபவித்துவரும் இன்னல்கள் பற்றியும், அதைத் தடுத்து நிறுத்திட கச்சத்தீவை மீட்கும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஆதரவு கேட்டும் தமிழ்நாடு முழுவதும் மீனவ மக்களை சந்தித்தோம், தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மீனவர் கிராமங்களில் உள்ள பஞ்சாயத்துக்களில் சிறப்பு கூட்டம் போட்டு கச்சத்தீவு பற்றி மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அவர்களிடம் கச்சத் தீவு விவகாரத்தில் 1960-களில் இருந்து நடந்தவை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை துண்டறிக்கைகளாக கொடுத்து விளக்குகிறோம். இதன் மூலம் இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை மீனவர்களிடம் எடுத்துச் சென்றுள்ளோம்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என மீனவ மக்கள் வசிக்கும் அத்தனை தொகுதிகளுக்கும் நேரில் சென்று பிரதமர் மோடி கச்சத் தீவை மீட்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றி விளக்கினோம்.

இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இப்பகுதிகளுக்கு பாஜக மீனவரணி மாநில நிர்வாகிகள் குழுவினரையும் அனுப்பி வைத்துள்ளோம். அவர்களும் இப்போது மீனவர் பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள்.இதுகுறித்து தேசிய தலைமையும் மாநில தலைமையும் மிகவும் அக்கறை எடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் ” என்றார்.

திமுகவும் காங்கிரஸும் இதை மேடைப் பேச்சோடும் பதில் அறிக்கைகளோடும் விட்டுவிட்டார்கள். ஆனால் பாஜகவோ கடற்கரை தொகுதிகள் முழுவதும் இன்று வரை கச்சத்தீவு பற்றி பிரச்சாரம் செய்து வருகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடுகிறதோ அந்த கட்சிக்கான சின்னத்தோடு லட்சக்கணக்கில் துண்டறிக்கை அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு திருவள்ளூரில் பாஜக போட்டியிடுகிறது. அங்கே கச்சத் தீவு துண்டறிக்கை தாமரை சின்னத்தோடு அச்சிடப்பட்டுள்ளது. அதே துண்டறிக்கை ராமநாதபுரத்தில் பலா பழ சின்னத்தோடு அச்சிடப்பட்டுள்ளது.

10 பேர், கோவில் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

இதற்கிடையே நேற்று (ஏப்ரல் 12) தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்துக்கு வாக்கு சேகரித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’கச்சத் தீவில் மீனவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக உரிமை இருந்தது. ஆனால் இதெல்லாம் அப்போதே கருணாநிதிக்கு தெரிந்தும் அன்று கச்சத் தீவு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்தவில்லை. இதை இன்றுவரை திமுகவும் காங்கிரஸும் ஒப்புக் கொள்ளவில்லை. மீனவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்” என்று பேசினார்.

ஒருபக்கம் பேச்சு, இன்னொரு பக்கம் கடற்கரை பகுதிகளில் ஆழமான பிரச்சாரம் என்று மீனவர் வாக்குகளில் ஒரு பகுதியையாவது கவரலாம் என்ற திட்டத்தில் கமுக்கமாக தொடர்ந்து வலை விரித்து வருகிறது பாஜக. இந்த வலையில் மீனவர்களின் வாக்குகள் சிக்குமா என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராகுலுக்கு இனிப்பான வெற்றியை தருவோம்: ஸ்டாலின்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெளியேறிய பிரபல நடிகை… காரணம் இதுதானா?

+1
0
+1
5
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *