சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கர்கள் குறித்து தான் பேசியது குறித்து நடிகர் கஸ்தூரி இன்று (நவம்பர் 5) மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் வந்தன. ஆனால், அவை என்னை பாதிக்கவில்லை, மாறாக எனது முடிவில் மேலும் உறுதிகொள்ள வைத்தது.
இருப்பினும் இன்று மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், நான் பேசிய சொற்கள் தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்களை எந்த விதத்தில் பாதித்துள்ளது என்பதை பொறுமையாக விளக்கினார்.
நான் பாரதமாதாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி. நான் சாதி, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்.
தெலுங்கு மொழிக்கும் எனக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்ம நாயக்கர், தியாகராஜ கீர்த்திகள் பாடி புகழ் பெற்ற நாட்களை ரசித்து வளர்ந்தவள் நான்.
என்னுடைய தெலுங்கு திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், மற்றும் அன்பு கொடுத்துள்ளனர்.
நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட நபர்களைச் சார்ந்ததே தவிர தெலுங்கு மொழி பேசும் சமூகத்தைச் சார்ந்தவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது எனது நோக்கமாக இருக்கவில்லை. நான் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது உரையில் தெலுங்கு மக்கள் தொடர்பாக நவம்பர் 3ஆம் தேதி அன்று நான் பேசியதை திரும்பப் பெறுகிறேன். இந்த சர்ச்சை அந்த உரையில் நான் எழுப்பிய முக்கியமான விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பிவிட்டது.
அதனால் தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்களை, கண்ணியத்துக்காக போராடும் தமிழ்நாட்டின் பிராமணர்களுடன் உடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்” என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கஸ்தூரி பேசுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது… ஆ.ராசா பதிலடி!
தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… கஸ்தூரி மீது குவியும் புகார்கள்!
எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்களுக்கு 10 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு இல்லை : காரணம் என்ன?