2026 தேர்தலில் திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என்று விஜய் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு கூட்டம் இன்று (டிசம்பர் 8) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்!
அப்போது அவர், “தமிழகத்தில் பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்தோம்.
2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் ஜெயிக்காது. அவர்களின் கணக்கு மைனஸ் ஆகும் என்று விஜய் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன். இதற்கே அவருக்கு ஆதரவு கொடுக்கலாம்.
இருவரும் விசிகவில் இருக்க வாய்ப்பில்லை!
ரொம்பா நாளாக திமுகவுடன் வாக்கப்பட்டு விசிக அவர்களுடன் இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை. விசிகவில் திருமாவளவன் இருக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜூன் இருக்க வேண்டும். இரண்டு பேரும் விசிகவில் இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் நமக்கு தெரிகிறது.
உதயநிதிக்கு இது ஒன்றும் புதிதல்ல!
சினிமா செய்திகளை பார்க்கவில்லை என உதயநிதி கூறியுள்ளது ரெட்ஜெயிண்ட் குறித்து பேசியுள்ளாரே என்று நான் நினைத்தேன். உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. முன்னதாக சனாதனம் குறித்தும், ரஜினி குறித்தும் அவர் தரக்குறைவாக பேசியுள்ளார். தற்போது விஜய், ஆதவ் அர்ஜூன் குறித்தும் அப்படி பேசி உள்ளார். அவர் அடிக்கடி இப்படி தான் பேசி வருகிறார்.
சென்னை வெள்ளம் இப்படி தான் வடிஞ்சது!
மக்களை பொருத்தவரைக்கும் இன்னைக்கு எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஆளும் திமுக தான் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
சென்னை வெள்ளத்தில் தண்ணீர் வடிந்ததற்கு காரணம் 4000 கோடி வடிகால் திட்டம் இல்லை. வெள்ளநீர் தானாக வடியவில்லை. மின்மோட்டார் கொண்டு தண்ணீரை உறிஞ்சி எடுக்கப்பட்டது. இதற்கு 4000 கோடிக்கு மின் மோட்டாரே வாங்கியிருக்கலாம்.
ஒரே குடையின் கீழ் வர வேண்டும்!
திமுக உதயசூரியனுக்கு எதிராக கடந்த 60 ஆண்டுகளாக இரட்டை இலை தான் இருந்து வருகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவின் உண்மையான வீச்சையும் அவர்களின் முகத்தையும் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம்.
ஒரு கட்சியின் கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும். மற்ற கட்சிகள் தனிதனியா இருக்கும் வரை திமுக கூட்டணி தான் ஜெயிப்பார்கள்.
விஜய், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை உசுப்பேத்திவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை திமுக செய்து கொண்டிருக்கிறார்கள்.
நான் ஜெயிலுக்கு சென்றபோது எனக்கு முதல் ஆதரவு கொடுத்தது சீமான் தான். அவருக்கு தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடாக ஒன்று சொல்கிறேன். சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை, திமுகவை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும்.
மக்களின் ஒரே ஆசை திமுகவை வெளியேற்ற வேண்டும் என்பதுதான். அதன்படி திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும். அதன்பின்னர் உங்கள் கொள்கையை பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சொல்வேன்” என்று கஸ்தூரி கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.