தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி இன்று (நவம்பர் 11) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்களை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
அவரது பேச்சுக்கு திமுக, பாஜக என பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்த நிலையில், தெலுங்கர்கள் குறித்த தனது பேச்சுக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையில், கஸ்தூரிக்கு எதிராக சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக மதுரை திருநகரில் நாடார் மகாஜன சங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “தெலுங்கு மக்கள் குறித்து பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடும் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜகவுடன் கூட்டணியா? : அதிமுக நிலைப்பாட்டை உறுதி செய்த ஜெயக்குமார்
டிரம்ப் மனைவி மெலானியாவின் நிர்வாண படம்…. ஒளிபரப்பிய ரஷ்ய அரசு டிவி!