நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது நாளை மறுநாள் (நவம்பர் 14) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் மக்களை அவதூறாகப் பேசியதால், திமுக, பாஜக எனப் பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்த நிலையில், தெலுங்கர்கள் குறித்த தனது பேச்சுக்குக் கஸ்தூரி தனது எக்ஸ் பக்கம் மூலம் மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையில், கஸ்தூரிக்கு எதிராகச் சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக மதுரை திருநகரில் நாடார் மகாஜன சங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி நேற்று(நவம்பர் 11) மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
அப்போது கஸ்தூரி தரப்பில், கஸ்தூரி ஒட்டுமொத்த தெலுங்கு சமூகத்தைப் பற்றிப் பேசவில்லை. குறிப்பிட்ட நபர்களைப் பற்றித்தான் பேசினார்.
பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்ட பின்பும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.
இதற்கு நீதிபதி ” கஸ்தூரி எதற்குக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களையும் ராஜாக்களின் அந்தப்புரத்தையும் சேர்த்து வைத்துப் பேசினார்?” என்று கேள்வி எழுப்பினார்.
” அப்படிப் பேசினதற்குக் கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்குக் கஸ்தூரியை காவல்துறை கைது செய்யத் தேவை இல்லை” என்று கஸ்தூரி தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருந்த காலகட்டத்திலிருந்தே தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்கள் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்று கூற முடியாது.
வட சென்னையில் என்னுடன் வாழ்ந்த பெரும்பாலானோர் தெலுங்கு பேசுபவர்கள் தான். ஆனால், இன்று சிலர் சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கிறார்கள்.
படித்தவர் மற்றும் சமூக ஆர்வலர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் மனுதாரர், எப்படி அப்படிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்கலாம்?
தான் பேசிய காணொளியைப் பார்க்கும் போது அது சமூகத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று கஸ்தூரிக்குத் தெரியவில்லையா?
நீங்கள் மண்ணை வாரிப் போட்டுவிட்டு பிறகு மன்னிப்பு கோருகிறீர்கள்.மேலும் கஸ்தூரி மன்னிப்பு கேட்ட காணொளியில், அவர் தான் பேசியதை நியாயப்படுத்துவதாகத் தான் தெரிகிறது.” என்று கூறினார்.
இதற்குப் பதிலளிக்கக் கஸ்தூரி தரப்பு சிறிது கால அவகாசம் கேட்டதால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை 4.30 மணிக்கு ஒத்திவைத்தார்.
பின்னர் மாலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது கஸ்தூரியின் தரப்பு ” கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்களை பற்றி அவதூறாக பேசவில்லை. அவர்கள் ராஜாக்களின் அந்தபுரத்தில் வசிக்கும் பெண்களுக்கு பணிவிடை செய்யத்தான் வந்தாரக்ள் என்று கஸ்தூரி பேசினார்” என்று தெரிவிக்கப்பட்டது
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ” கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்கப்படக்கூடாது. அவர் சமூகத்தை பிளவுபடுத்த நினைக்கிறார்.” என்றார்.
இதற்கு நீதிபதி, “இந்த குற்றத்திற்குக் காவல் விசாரணை தேவைப்படுமா? என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆமாம் என்று அவர் பதிலளித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கின் தீர்ப்பை நவம்பர் 14ஆம் தேதி ஒத்திவைத்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரிச் அண்ட் மிடில்கிளாஸ் லுக்! விருப்பமில்லாமல் நடிக்க வந்து வெற்றி பெற்ற ஜெயபிரகாஷ்
சிறப்புக் கட்டுரை: வறுமையை எப்படி அளக்கக் கூடாதென்றால்…
“காழ்ப்புணர்ச்சியோடு பெயரிடாத அறிக்கை” : ஆட்சியாளர்களுக்கு எடப்பாடி கண்டனம்!
சைமன் சீமான் கறாரான ஆளாச்சே! மன்னிப்பு கேட்க மாட்டாரே!🤔🤔🤔