உத்தரப்பிரதேச வாரணாசியில் ஒரு மாதம் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் (டிசம்பர் 16) நிறைவுபெற்றது.
உத்தரப்பிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதைப் புதுப்பிக்கும் நோக்கில், வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இளையராஜா பேச்சு
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தார். இவ்விழாவில் முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி வீணை வழங்கியதாக குறித்து இளையராஜா பேசியது இணையத்தில் பலரையும் தேட ஆரம்பித்ததுடன், அந்த வீணை தற்போது எங்கு உள்ளது எனவும் கண்டுபிடிக்க வழிவகை செய்தது.
அதேநேரத்தில் இவ்விழா அரசு விழாவா… அரசியல் விழாவா எனப் பலரிடமும் கேள்விகளை எழுப்பியதுடன், தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கும் இருக்கும் நீண்டகாலப் பண்பாட்டுத் தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சி என ஒரு தரப்பினரும், மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள், போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவற்றில் இந்தியை முன்னிறுத்தும் மோடி அரசு, தமிழை வைத்து பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என இரு வேறு கருத்துகளும் எழுந்தன.
மேலும் இந்த விழாவில் தமிழக அரசு பங்கேற்க மத்திய அரசு சார்பில் இருந்து முறையான அழைப்புகளும் வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதுகுறித்து நம் மின்னம்பலத்தில், காசி தமிழ் சங்கமம்: அரசு விழாவா… அரசியலா என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
எனினும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
விழா நிறைவு
ஒரு மாதம் நடைபெற்ற இவ்விழா, இன்றுடன் நிறைவுபெற்றது. இந்த நிறைவு விழாவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
இவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் அமைச்சர் அமித் ஷாவுக்கு வீணை பரிசளிக்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் உதித்ததுதான் இந்த காசி தமிழ் சங்கமம். இது ஒரு புதிய மலர்ச்சி என்று சொல்வதைவிட, மிக நீண்டகாலமாக கலை, பண்பாடு, ஞானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் காசியும் தமிழகமும் ஆழ்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த தொடர்பின் பாதை தற்போது இன்னும் அகலப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய நாட்டில் பல்வேறு பழக்கவழக்கங்கள், மரபுகள் இருந்தாலும்கூட இவை எல்லாவற்றுக்குள்ளேயும் மையமாக பாரத தேசியம் என்கிற தொடர்புதான் ஆதாரமாக இருந்திருக்கிறது. இதை நமக்கு விடுதலை கிடைத்த உடனேயே நாம் மேலும் வெளிக்கொணர்ந்து மலர்த்தியிருக்க வேண்டும். ஆனால், அப்போது நாம் செய்ய தவறிவிட்டோம்.
மோடியின் மிகப்பெரிய முயற்சி
இந்த 75வது ஆண்டு சுதந்திர தின பெருவிழாவில் இப்படியொரு நிகழ்வை நடத்தியதற்கு மோடிஜிக்கு நன்றி. இதை நாம் தொடர வேண்டும் என்பதையும் நான் நினைவுபடுத்துகிறேன். நம்முடைய கலைகள், மொழிகள், இலக்கியங்கள், பண்பாடுகள் ஆகியன வேறுவேறாக இருந்தாலும், இவற்றுக்கு எல்லாம் இருக்கக்கூடிய ஒரே ஆன்மா, பாரதம் என்பது மட்டுமே.
மற்ற நாடுகளின் நிலப்பரப்பு அரசியலால் இணைக்கப்பட்டது. ஆனால், நம் நாடு பண்பாட்டால் இணைக்கப்பட்டது என்பதை உணர்கிறோம். அத்தகைய பண்பாட்டினால் நாம் இணைந்திருப்பதால், அதன் ஆதாரம் நம் ஆன்மாதான். நம்முடைய தேசத்தின் ஆன்மா, பண்பாட்டின் தொடர்பு ஆகும்.
காசி மற்றும் தமிழகத்தின் பண்பாட்டை இணைப்பதற்கான மிகப்பெரிய முயற்சியை மோடி எடுத்துள்ளார். காசி மற்றும் தமிழ்நாடு என்று இல்லாமல் நாடு முழுவதும் இந்த கலாசாரம் ஒன்றுதான் என்ற ஒருங்கிணைப்பு வரவேண்டும்.
காசி மாநகரில் இருந்து இந்த தேசம் முழுவதையும் இணைக்க வேண்டும் என்று ஆதிசங்கரர் நினைத்ததைப் போன்று, தற்போது இந்த தேசம் முழுவதையும் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குப் பிறகு, மோடி மட்டுமே எண்ணியுள்ளார்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்: வார்த்தைகளை குறித்து வைக்கச் சொன்ன ராகுல்
ஐபிஎல்லை விட பிஎஸ்எல் தான் சிறந்தது: முகமது ரிஸ்வான் சொன்ன காரணம்!