அரசியல்வாதிகள் சிலரின் கெட்ட செயலால் கரூர் மண் தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய ஊராக மாறியிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 1) கூறியுள்ளார்
கரூரில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய அவர், “தமிழகத்தில் கரூர் மண்ணுக்கு என ஒரு தனி சிறப்பு இருக்கிறது. இது ஒரு ஆன்மீக மண். சித்தர் கரூரார் வாழ்ந்த ஊர்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக அரசியல் கெட்டுப் போய் இருக்கிறது என்றால் அதற்கும் மையப்புள்ளியாக கரூரே மாறியிருக்கிறது. ஓட்டுக்கு பணம் என்ற அவமானம் கரூரில் எப்பொழுதும் உள்ளது.
இந்திய வரலாற்றிலேயே பணத்திற்காக நிறுத்தப்பட்ட ஒரு தேர்தல் என்றால் அது அரவக்குறிச்சி தேர்தல் தான்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ஆன்மீகத்திற்கு பெயர்போன மண்; அரசியல்வாதிகள் சிலரின் கெட்ட செயலால் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய ஊராக இன்றைக்கு கரூர் மாறி இருக்கிறது என்றால் நிச்சயமாக அது பொய் கிடையாது.
செந்தில் பாலாஜிக்கு பாஜகவை பார்த்து பயம் இருக்கிறது; அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால் கரூர் மாவட்ட திமுக தொண்டர்களுக்கு எதற்காக பாஜகவை பார்த்து பயம்.
கரூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் திமுகவின் மாவட்ட செயலாளர் போல செயல்படுகின்றனர். கரூருக்கு திமுக மாவட்ட செயலாளர் இல்லை என்ற குறையை அவர்கள் நிவர்த்தி செய்கின்றனர்.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றனர்.
அவர்களுக்கு தமிழக பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. கரூர் மாவட்டத்தில் திமுக என்ற கட்சி முழுதாக அழியும் நேரம் வந்துவிட்டது.
தமிழக முதல்வர் தன்னைத்தானே நம்பர் ஒன் என்று சொல்கிறார். ஆனால் அவர் மணல் கடத்துவதில், சாராய விற்பனையில், 14 ஆண்டுகளாக கள்ளச்சாராய மரணம் இல்லாத தமிழகத்தில் 22 பேர் கள்ளச்சாராயத்தின் மூலம் மரணம் அடைந்ததில் தான் மு.க.ஸ்டாலின் நம்பர் ஒன் முதல்வர்”என்றார்.
மேலும், எங்களுக்கு ஒரே ஒரு பிரதமர் மோடி தான். மூன்றாவது முறையும் அவர் தான் பிரதமர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இப்படி ஒரு பிரியாணி காதலனா! ஸ்விக்கி வெளியிட்ட சூடான தகவல்!
சென்னை : சாலை பணிகள் விரைவில் முடியும் – மு.க.ஸ்டாலின்