ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 6) தள்ளுபடி செய்தது.
கரூரில் தொழிலதிபர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் நிலமோசடி புகார் அளித்திருந்தார்.
போலி சான்றிதழ்கள் மூலம் 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதன்பேரில் 7 பேர் மீது கரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜூன் 12ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரும் வழக்கில் சேர்க்கப்பட்டார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு ஜூலை 2ஆம் தேதி அவர் மனு தாக்கல் செய்தார். ‘அப்பாவின் உடல்நிலை சரியில்லை. அவரை அருகிலிருந்து கவனித்துகொள்ள வேண்டும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும்; என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த மனு மீதான உத்தரவை நீதிபதி சண்முகசுந்தரம் இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்தநிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி சண்முகசுந்தரம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை… சிபிஐ விசாரிக்க பகுஜன் சமாஜ் கூட்டத்தில் வலியுறுத்தல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை… கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு!