நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை இரண்டு முறை கரூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரள மாநிலம், திருச்சூரில் நேற்று (ஜூலை 16) சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்த போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்காக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்ததும், போலீஸ் வேனில் ஏறிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “என் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்கு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சந்திப்போம்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விஜயபாஸ்கர் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவரையும் 15 நாட்களில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், அவரது ஆதரவாளர் பிரவீன் குளித்தளை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆஜர்படுத்தியபோது அங்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கவிஞர் வீட்டில் கைவரிசை: மகாராஷ்ராவில் விநோத சம்பவம்!
டாப் 10 நியூஸ்: மொஹரம் பண்டிகை முதல் தங்கலான் பாடல் ரிலீஸ் வரை!