சிறையிலிருந்தே காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி…திணறவைக்கும் விஜயபாஸ்கர்…சூடுபிடித்துள்ள கரூர் களம்!

அரசியல்

துவக்கத்தில் கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியுடன் முரண்பட்டு அவருக்கு ஆதரவாக வேலை செய்ய தயக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சிறையிலிருந்தபடியே கரூர் களத்தில் பல முக்கியமான மூவ்களை செய்து வருவதால் கரூரின் களம் சூடுபிடித்துள்ளது.

கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜோதிமணியும், அதிமுக சார்பில் தங்கவேலும், பாஜக சார்பில் செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பாக கருப்பையாவும் களத்தில் உள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் & 2021 சட்டமன்றத் தேர்தல் ஒப்பீடு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை வீழ்த்தினார். அந்தத் தேர்தலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜோதிமணி பெற்ற வாக்குகளின் விவரங்களை, 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது,  கடந்த இரண்டு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சில முக்கியமான மாற்றங்களை கவனிக்கலாம்.

  • முதலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி.

2019 பாராளுமன்றத் தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஜோதிமணி அதிமுகவின் தம்பிதுரையை விட 62,814 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் காந்திராஜன் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 17,553 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் என்பது மூன்று மடங்கு குறைந்திருக்கிறது.

  • இரண்டாவதாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் ஜோதிமணி 75,149 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் இளங்கோ பாஜக வேட்பாளர் அண்ணாமலையை 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இங்கும் 2 ஆண்டுகளில் திமுக கூட்டணியின் வாக்கு வித்தியாசம் மூன்று மடங்கு குறைந்திருக்கிறது.

  • மூன்றாவதாக கரூர் சட்டமன்றத் தொகுதி.

2019இல் அதிமுக வேட்பாளரை விட 62,717 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார் ஜோதிமணி. 2021 திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி அதிமுக வேட்பாளார் எம்.ஆர்.விஜயபாஸ்கரை விட 12,448 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இங்கும் வெற்றி வித்தியாசம் பெரிய அளவில் குறைந்திருக்கிறது.

  • நான்காவதாக கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி.

இத்தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வித்தியாசமாக 66,218 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக கூட்டணி, 2021 சட்டமன்றத் தேர்தலில் 31,625 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தது.

  • ஐந்தாவதாக மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

2019 இல் மணப்பாறையில் மட்டும் 89,317 வாக்குகள் அதிகம் பெற்றார் திமுக கூட்டணியின் வேட்பாளர் ஜோதிமணி. 2021 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதி திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளரான அப்துல் சமது 12,243 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வீழ்த்தினார். இங்கும் திமுக கூட்டணியின் வாக்கு வித்தியாசம் பெருமளவு குறைந்தது.

  • ஆறாவதாக விராலிமலை சட்டமன்றத் தொகுதி

2019 இல் அதிமுகவை விட 66,248 வாக்குகள் அதிகம் பெற்றார் ஜோதிமணி. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் திமுக வேட்பாளரை 23,548 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். இருப்பினும் திமுகவின் வாக்கு வித்தியாசங்கள் தொடர்ந்து சரிந்திருப்பதை கவனிக்க முடிகிறது.

கரூரைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், சட்டமன்றத் தேர்தலாகட்டும் இரண்டிலும் திமுக பெற்ற வெற்றிக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. தற்போது செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். சிறையில் இருந்துகொண்டே கரூர் தொகுதியை இந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் ராகுல் காந்தியிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரசுக்கே கரூர் தொகுதியை ஒதுக்க வைத்தார் ஜோதிமணி.

அதன் பிறகு அடுத்த மூவாக, காங்கிரஸ் கட்சிக்கே கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டாலும் அதில் ஜோதிமணி வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேறு யாராவது போட்டியிடலாம் என்று கரூர் காங்கிரசில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் அழுத்தம் கொடுத்தார் செந்தில் பாலாஜி.

ஆனால்  போராடி கரூர் தொகுதியை மீண்டும் பெற்றுவிட்டார் ஜோதிமணி. இதனால் செந்தில் பாலாஜி தரப்பு சற்று அதிருப்தியில் இருந்து வந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் வேறு தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு செல்லலாமா என்று யோசித்து வந்தனர்.

ஆனால் இப்போது செந்தில் பாலாஜி அவரது ஆட்களுக்கு கரூரை விட்டு எங்கும் போகக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். கரூர் வேட்பாளர் ஜோதிமணியை முன்னிறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின்  ஈரோட்டில் நடத்திய பிரச்சாரப் பொதுக் கூட்டத்திற்கும் கரூரிலிருந்து ஆட்களை அனுப்பி வைத்தார் செந்தில் பாலாஜி.

ஜோதிமணி அதிக ஓட்டு வாங்க வேண்டும். நாம உள்ளே இருந்தாலும் சரி, வெளியில இருந்தாலும் சரி கரூர் தொகுதியில் நம் கட்சியின் கூட்டணி பெருவாரியான வாக்குகளைப் பெற வேண்டும் என்றும், ஜோதிமணி என்று பார்க்கக் கூடாது, நமது கூட்டணி என்று பார்த்து எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் செந்தில்பாலாஜி.

இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மணப்பாறை மற்றும் விராலிமலை தொகுதிகளில் மிகத் தீவிரமாக வேலை செய்து வருகிறார். இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் திணறுவதைப் பார்க்க முடிகிறது..

இன்னொரு பக்கம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கூட்டணிகளும் சம பலத்தில் உள்ளன.

மீதமுள்ள மூன்று தொகுதிகளான அரவக்குறிச்சி, கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிகளில் ஜோதிமணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. இந்த 3 தொகுதிகளும் கரூர் மாவட்டத்தில் வரும் தொகுதிகள் என்பதும் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகமுள்ள தொகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக வேட்பாளரான செந்தில்நாதன் கரூர் மாவட்ட பாஜக தலைவராக இருக்கிறார். இவருக்கு இவர் சார்ந்த கொங்குவேளாளர் கவுண்டர் சமுதாய இளைஞர்களிடம் வரவேற்பு இருக்கிறது. ஆனால் அண்ணாமலை தனது சொந்த ஊரான கரூரில் நின்றிருந்தால், ஜோதிமணிக்கு எதிராக ஒரு அதிர்வை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் கோவையில் சென்று போட்டியிட்டதால் செந்தில்நாதன் இங்கே அவ்வளவு அதிர்வை ஏற்படுத்திட முடியவில்லை என்று லோக்கல் பாஜகவினரே சொல்கிறார்கள்.

அதிமுக வேட்பாளர் தங்கவேல் இரட்டை இலை மற்றும் சமுதாய பலத்தை நம்பியிருக்கிறார். இவருக்காக எம்.ஆர். விஜயபாஸ்கரும்,  சி.விஜயபாஸ்கரும் வேலை செய்து வருகின்றனர். கரூருக்குள்ளேயே இவருக்கு பெரிய அறிமுகம் இல்லை. அதிமுக இன்னமும் பலமான வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும் என்பது அதிமுகவினரின் கருத்தாக உள்ளது.

இப்போதைய நிலையில் கரூரில் ஜோதிமணியின் கையே ஓங்கியிருக்கிறது.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விருதுநகர்: பின்தங்கும் சித்தி? முந்தப்போவது கையா? முரசா?

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் மீது சட்ட நடவடிக்கை: எச்சரித்த சு.வெங்கடேசன்

காங்கிரஸுக்கு குட்பை: பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

1 thought on “சிறையிலிருந்தே காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி…திணறவைக்கும் விஜயபாஸ்கர்…சூடுபிடித்துள்ள கரூர் களம்!

  1. வாக்கு வித்தியாசங்களை அட்டவணையாகப் பதிவிட்டால் படிப்பதற்கு எளிதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *