வைஃபை ஆன் செய்ததும், “அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜூன் 21 அதிகாலை 4 மணிக்கு இதய அறுவை சிகிச்சை” என்ற அப்டேட் இன்பாக்சில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இந்த விவகாரத்தின் அடுத்த கட்டங்கள் பற்றிய மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“தமிழ்நாடு மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால்… அவர் வகித்து வந்த துறைகளான மதுவிலக்குத் துறை ஈரோடு முத்துசாமிக்கும், மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும் மாற்றியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செந்தில்பாலாஜி மதுவிலக்குத் துறையில் இருந்து மாற்றப்பட்ட பின்னாலும் கூட டாஸ்மாக் கடைகளில் கரூர் கம்பெனியின் வசூல் தொடர்வதாக குற்றம் சாட்டுகிறார்கள் தொழிற்சங்கத்தினர்.
செந்தில்பாலாஜி மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக இருந்தபோதே அவரது கரூர் கம்பெனி நடத்திய வசூல் பற்றி வெளிப்படையாக பேசி வருபவர் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் திருப்பயர் ரமேஷ்.
கடந்த 14 ஆம் தேதி செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையிலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது டாஸ்மாக் துறை இன்னொரு அமைச்சருக்கு மாற்றப்பட்ட நிலையிலும் கரூர் கம்பெனியின் வசூல் முழுமையாக நிறுத்தப்படவில்லை என்று பகிரங்கமாக புகார் தெரிவிக்கிறார் இந்த ரமேஷ்.
இது தொடர்பாக டாஸ்மாக் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் எதுவும் அரசியல் காரணமாக வாய் திறக்கவில்லை என்றும் கூறுகிறார். அதாவது திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் தொழிற்சங்கத்தினர் வரும் எம்பி தேர்தலில் திமுகவிடம் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக வாய் திறக்கவில்லை. அதேநேரம் பாமக தொழிற்சங்கம் கூட செந்தில்பாலாஜியின் கரூர் கம்பெனி பற்றி பேச மறுக்கிறது. ஏன் அதிமுக தொழிற்சங்கம் கூட அடக்கிதான் வாசிக்கிறது.
தமிழகம் முழுதும் கரூர் கம்பெனி முறைகேடாக வசூல் செய்த பணத்தை இனியாவது அந்தந்த ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதையெல்லாம் கரூர் கம்பெனி செய்யும் என்று நம்பிக்கை இல்லை. எனவே கரூர் கம்பெனிக்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் புரோக்கர்கள் பட்டியலை அமலாக்கத்துறையிடமும், ஆளுநரிடமும் தொழிற்சங்கம் சார்பாக வழங்க இருப்பதாக அதிரடி முடிவெடுத்திருக்கிறார் ரமேஷ். இவர் அடிப்படையில் திமுககாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு புரோக்கர் அவருக்கு கீழே செயல்படும் ஏஜென்ட்டுகள் என பத்து பேருக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டனர். இவர்களின் சொத்துப் பட்டியலையும் சேகரித்து எல்லாவற்றையும் சேர்த்து ஆளுநரிடமும், அமலாக்கத் துறையிடமும் வழங்க இருக்கிறார்கள் இந்த சங்கத்தினர்.
இதற்காக ஆளுநரை சந்திக்க தேதி கேட்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஜூன் 30 ஆம் தேதி, ஜூலை 1 ஆம் தேதி வாக்கில் ஆளுநரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் இவர்கள்.
ஆளுநரை சந்திக்கும் முன்பு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் என தமிழ்நாடு முழுதும் இருக்கும் ஐந்து டாஸ்மாக் மண்டல அலுவலகங்களிலும் இதுகுறித்து போஸ்டர்களை ஒட்டி ஆங்காங்கே இருக்கும் டாஸ்மாக் ஊழியர்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் திரட்டி மொத்தத்தையும் அமலாக்கத் துறையிடமும் ஆளுநரிடமும் கொடுப்போம் என்கிறார் இவர்.
செந்தில்பாலாஜியை 2011-16 அதிமுக ஆட்சியில் நடந்த போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாகத்தான் அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் துறையில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் தொழிற்சங்கமே ஆதாரங்களை அளிக்கப் போவதாக கூறியிருப்பது செந்தில்பாலாஜி மீது மேலும் அமலாக்கத்துறையின் பிடி இறுகும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஆளுநர் மாளிகை ஏற்கனவே செந்தில்பாலாஜி விவகாரத்தில் தீவிரமாக இருக்கிறது. இப்போது செந்தில்பாலாஜி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் நடந்த விஷயங்கள் குறித்து தொழிற்சங்கங்களிடம் தகவல் பெறும் வேலையை தீவிரமாக்கியிருக்கிறது ஆளுநர் மாளிகை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செந்தில்பாலாஜி: அதிகாலையில் ஆபரேசன்… காலையில் விசாரணை!
“திருவாரூரில் இருந்தே முதல்வர் எங்களை இயக்குகிறார்”- அமைச்சர் சேகர் பாபு