‘கள்ளச்சாராய மரணத்தில் கபட நாடகம்’ : எடப்பாடியை அட்டாக் செய்த கருணாஸ்

Published On:

| By christopher

Karunas attacked Edappadi in 'Death of kallakurichi hooch'

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து கடந்த சில நாள்களாக எடப்பாடி பழனிசாமி கள்ள நாடக காட்சிகளை நடத்துவதாக முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி தலைவரும், நடிகருமான கருணாஸ் சாடியுள்ளார்.

சகிக்க முடியவில்லை!

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து கடந்த சில நாள்களாக எடப்பாடி பழனிசாமி நடத்தும் கள்ள நாடக காட்சிகள் சட்டசபையில் தொடங்கி உண்ணாவிரம் பந்தல் வரை சகிக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, எடப்பாடி தமிழ்நாட்டு உரிமை மீட்க ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்ததில்லை.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடிய போது அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்துவிட்டு தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னவர் தான் எடப்பாடி.

இது மட்டுமா.. எத்தனையோ.. அத்தனை தகிடுதத்தங்களையும், மறந்துவிட்டு இன்று உண்ணாவிரத நாடகமாடுகிறார் எடப்பாடி.

உயிரிழப்புகளை வைத்து திட்டமிட்ட அரசியல்!

சட்டமன்றத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சனைக்கு பேசாது மௌனமாய் இருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி,  இன்று கள்ளக்குறிச்சிக்கு காவடி ஆடுகிறார்.

அவர் ஆட்சியில் இருந்தபோது, சபாநாயகர் தனபாலை வைத்து என்னென்னவெல்லாம் செய்தார் மறந்து விட்டார் போல. எத்தனை முறை மக்கள் பிரச்சனையை பேச வந்த திமுகவை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றினார். அதுவும் மறந்துவிட்டார் போல. எடப்பாடி செய்வது அரசியல் நாடகம் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்தக் கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் ஆதாய அரசியல் செய்கின்றனர்.

கள்ளச்சாராய மரணங்கள் கொடுமையிலும் கொடுமைதான். அதற்குரிய தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் செய்தது; செய்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் என இடமாற்றம் செய்யப்பட்டார்கள்; நீக்கப்பட்டார்கள். கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைக்காமல், திசை திருப்பும் அரசியலை கையில் எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி நாடகமாடுகிறார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து உண்மையாகவே எடப்பாடி விவாதிக்க தயாராக இல்லை. ஆனால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை வைத்து திட்டமிட்டு அரசியல் செய்கின்றார்.

Image

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஒழிந்ததா?

ஏன்? எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழவில்லையா? அதற்காக நான் கள்ளக்குறிச்சியை நியாயப்படுத்தவில்லை! அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன.

ஆனால் இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் 53 பேர் உயிரிழந்தனர். 200 பேரின் பார்வை பறிபோனது. அப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன்பிறகு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஒழிந்ததா? அப்போதெல்லாம் எங்கிருந்தார் எடப்பாடி?

பா.ஜ.க. ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் ஏழெட்டு ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறின. ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநில முதல்வர்களை பதவி விலகக்கோரி யாரும் கூறவில்லை.

அதேபோல் அதிமுக ஆட்சியில் நடந்த மரணங்களுக்கு யாரும் பதவி விலகுமாறு கூறவில்லை. ஆனால் எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு மு.க ஸ்டாலின் பதவி விலகவேண்டும்… என்ற அற்ப ஆசை தலைக்கு ஏறுவதுதான் ஏன் என்று தெரியவில்லை?

தொடர் தோல்வியை மூடிமறைக்க கபடநாடக வித்தை!

நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதியிலும் நாக்கை புடுங்கிக் கொள்ளும் அளவிற்கு படுதோல்வியடைந்து மண்ணை கவ்விய எடப்பாடி வெட்கமே இல்லாமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறார்.

அன்று தூத்துக்குடி காவல் நிலையத்தில் இருவர் இறந்ததற்கு சி.பி.ஐ விசாரணை கேட்டார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின். இப்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம்” என்று பெரிய புத்திசாலி போல கேள்வி கேட்கிறார் பழனிசாமி.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்திருந்தால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம், தவறில்லை. ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் எடுத்ததை பார்த்த பிறகும், சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்கிறார் என்றால், அதுதான் எடப்பாடியின் அரசியல் நாடகம்!

அதிமுகவின் தொடர் தோல்வியை மூடிமறைக்க எடப்பாடி காட்டும் கபடநாடக வித்தை இது. எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. வந்த நாளிலிருந்து சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் தோல்வி மட்டுமே எஞ்சியது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ரேஸிலிருந்து பின்வாங்கிய அதிமுக - பின்னணி என்ன?! | Background of ADMK party which retreat in Vikravandi election - Vikatan

விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு – 2 காரணங்கள்!

அதனால்தான், ‘தேர்தல் நேர்மையாக நடக்காது’ என்று சொல்லி விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆடத் தெரியாதவளுக்கு வாசல் கோணல் கதைதான்.

இவரது தேர்தல் புறக்கணிப்புக்குப் பின்னால் இரண்டு சூழ்ச்சிகள் இருக்கின்றன. ஒன்று, அ.தி.மு.க. போட்டியிட்டால் நிச்சயம் தோற்றுப் போகும். எனவே அந்தத் தோல்வி முகத்தை மறைக்கலாம் என்பது.

இன்னொன்று தனது எஜமானன் ரகசிய உறவாளன் பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து தனது அடிமை விசுவாசத்தைக் காட்டிக் கொள்வது! வேறென்ன காரணம் இருக்க முடியும்?

பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச அழிவு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை போன கட்சி அ.தி.மு.க. சிறுபான்மை இசுலாமிய இன மக்களுக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்தது அதிமுக. தமிழ்நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள்.

இதேபோல்தான் பா.ஜ.க.வின் அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களுக்கும் ஆதரவாக இருந்து செயல்பட்ட ஓடிசா நவீன் பட்நாயக்கும், ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டியும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதை அ.தி.மு.க., மறந்து விடக் கூடாது.

மக்களுக்கான அரசியலை செய்ய எடப்பாடி கற்றுக்கொள்ளட்டும். சந்தடி சாக்கில் சந்தியா ராகமெல்லாம் பாடி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். எடப்பாடி செய்வது கபட நாடகம்தான் என்பது மக்களுக்கு தெளிவாக புரியும்” இவ்வாறு கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நீட் விலக்கு : தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

நீங்கள் கேட்டவை – கமர்ஷியல் படங்களுக்கான ஒரு முன்னோடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel