சுதந்திர தினத்தில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை கலைஞர் பெற்றுத் தந்து இன்றுடன் 50ஆண்டுகள் ஆகிறது. 50ஆவது ஆண்டில் கலைஞரின் மகனும், முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) கோட்டையில் கொடி ஏற்றுகிறார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தன்று பிரதமரும் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
1974 ஆண்டுக்கு முன்னர் மாநிலங்களில் ஆளுநர்கள் தான் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றி வந்தனர்.
டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கொடி ஏற்றும் போது, மாநிலத்தில் மட்டும் முதல்வர் கொடி ஏற்றாமல், ஆளுநர் கொடி ஏற்றுவது ஏன் என்று முதலில் குரல் எழுப்பியவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.
1969 ஆகஸ்ட் 15ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய கலைஞர் ஆகஸ்ட் 15ஆம் நாள் மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களுக்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி வந்தார்.
1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைஞர் வைத்த கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கொடியேற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கினார்.
அதன்பிறகு 1974ஆம் ஆண்டு நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் முதன் முறையாக கலைஞர் தேசிய கொடி ஏற்றினார். தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இப்படி ஒரு உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர்.
இன்று மாநில சுயாட்சி குறித்து பல்வேறு மாநிலங்களும் பேசத் தொடங்கியிருக்கும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே அதற்காக போராடியவர் கலைஞர்.
மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை கலைஞர் பெற்றுதந்த 50ஆம் ஆண்டில், அதே இடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றயிருக்கிறார்.
மாநில முதலமைச்சர்கள் தேசிய கோடி ஏற்றி சல்யூட் அடிப்பது என்பது கம்பீரமாக பறக்கும் தேசிய கொடிக்கு மட்டுமல்ல, அந்த மரியாதை இப்படி ஒரு உரிமையை பெற்றுத் தந்த கலைஞருக்கும் தான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலை நிறுத்தம் கூடாது: என்எல்சி தொழிற்சங்கத்துக்கு உத்தரவு!
பார்வை குறைபாடு – பேருந்து பயண அட்டை பெற சிறப்பு முகாம்கள்: எங்கெங்கு, எந்த நாட்களில்?