சென்னை மெரினா கடற்கரையில் அமைய உள்ள கலைஞர் பேனா நினைவுச் சின்ன மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தில் 2.23ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவருடைய எழுத்தாற்றலைப் போற்றும் வகையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட இருக்கிறது.
கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்துசென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டிமுடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் (ஜனவரி) 31ஆம் தேதி காலை 10.30மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் இந்த திட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைய உள்ள கலைஞர் பேனா நினைவுச்சின்ன மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பேனா நினைவுச் சின்னத்தின்கீழ் கலைஞர் கூறிய கருத்துகள் கல்வெட்டாக பொறிக்கப்பட இருக்கிறது.
கடலுக்குள் அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள கட்டுமானம் சிக்குக் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளது. கலைஞர் நினைவிடத்திலிருந்து பேனா சிலைக்குச் செல்லும் பாலம் கடல் அலை வடிவத்தில் அமைக்கப்படவுள்ளது.
ஜெ.பிரகாஷ்