முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் இன்று ( ஆகஸ்டு 7) காலை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இன்று ஆகஸ்ட் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யவும், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதேசமயம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியானது ஆகஸ்ட் 7 -ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை நடைபெறுகிறது.
பேரணியின் இறுதியில் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த பேரணியில் மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்கு கலைஞர் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறும் வகையில் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு தரப்பினரும் இந்த பேரணியில் கலந்துகொள்கிறார்கள். “கலைஞர் துயில் கொள்ளும் இடமே நாம் தொழுகின்ற இடம்” என்று குறிப்பிட்டு அழைப்பு விடுத்துள்ளார் பொதுச் செயலாளர் துரைமுருகன்.
கலைஞர் நினைவுப் பேரணி காரணமாக அண்ணாசாலையிலும் காமராஜர் சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படலாம்.
இந்தியாவில் 7% கொரோனா தமிழகத்தில்: மத்திய அரசு எச்சரிக்கைக் கடிதம்!