திமுக அரசை கண்டித்து இன்று(மார்ச் 10) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடிக்கு எதிராக பேசிய பாஜக நிர்வாகியிடம் இருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழ்நாடு காவல்துறை வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து அண்ணாமலை மீது பொய்வழக்கு போடுவதாக கூறி ஆளும் திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜ், கராத்தே தியாகராஜன், குஷ்பு சுந்தர், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றாலும், மேடையில் பேசிய பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும்பாலும் அதிமுகவையும், எடப்பாடி பழனிச்சாமியையுமே கடுமையாக விமர்சித்தனர்.
குறிப்பாக மத்திய சென்னை மாவட்டத்தலைவர் விஜய் ஆனந்த், ”தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி பாஜக தான். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. திறனற்ற எடப்பாடி, ஆளுமையற்ற எடப்பாடி என பேச அவரிடம் இருந்து மைக்கை தட்டிப்பறித்தார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
அதே வேளையில் அப்போது மேடையில் நின்றிருந்த குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது விஜய் ஆனந்த் பேசிய இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே சென்னையில் பாஜகவுக்கு கட்சி அமைப்பில் ஏழு மாவட்டங்கள் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 500 பேரே வந்திருந்தனர்.
”ஒரு மாவட்டத்திற்கு 500 பேர் வந்திருந்தால் கூட 3500 பேர் வந்திருக்க முடியும். ஆனால் கட்சி தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் தான் வந்திருக்கிறார்கள். அண்ணாமலை வந்திருந்தால் கூட்டம் வந்திருக்குமோ என்னமோ” என்று ஆர்ப்பாட்டத்திலேயே கிசுகிசுத்துக் கொண்டனர் சீனியர் நிர்வாகிகள்.
மேலும், மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ’திறனற்ற’ என்பதற்கு பதிலாக ’திரனற்ற’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது கூட தெரியாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
டான்செட், சீட்டா தேர்வு: ஹால் டிக்கெட் பெறுவது எப்படி?
சாதாரண சட்டத்திற்கு கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு!