பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்: கார்த்திக் சிதம்பரம் ஆதரவு

அரசியல்

பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் ஸ்டாலின் பேசப்படுவதில் என்ன தவறு உள்ளது என்று காங்கிரஸ் எம் பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை ரயில் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”2024 நாடாளுமன்றத் தேர்தலில் அணிகள் இன்னும் அமையவில்லை. அணிகள் அமைந்த பின்பு தான் தேர்தல் குறித்து கணிக்க முடியும். வட கிழக்கு மாநிலங்கள் தேர்தல் முடிவுகள் வைத்து இந்திய பொதுத் தேர்தலை கணிக்க முடியாது.

தமிழ்நாட்டில் நடக்கும் இடைத்தேர்தல் என்பதற்கு ஒரு இலக்கணம் உண்டு. அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியினருக்கு தான் இடைத்தேர்தல் முடிவுகள் ஆதரவாக இருக்கும்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் ஒரு பூஸ்ட் தான். எதிர்க்கட்சியினருக்கு இது ஒரு பின்னடைவு.

இந்திய அளவில் பாஜகவிற்கு எதிராக ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்றால் அந்தக் கூட்டணிக்கு அச்சாரமாக காங்கிரஸ் இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையில் தான் அந்த கூட்டணி அமைய வேண்டும் என்று முதல்வர் கூறிய கருத்து சரியான கருத்து.

அரசியல் நிலையை புரிந்து கொண்டு முதல்வர் கூறிய கருத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன்.

பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் இருக்கக் கூடாது இன்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறிய கருத்துக்கு பதில் அளித்த கார்த்திக் சிதம்பரம், பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் ஸ்டாலின் பேசப்படுவதில் தவறு கிடையாது.

மாநில முதல்வராக இருந்தவர்கள் இந்தியாவிற்கு பிரதமராக ஆகி உள்ளார்கள். ஏன் தேவகவுடா, நரேந்திர மோடி கூட பிரதமர் ஆகியுள்ளனர். ஒரு மாநில முதலமைச்சர் இந்தியாவிற்கு பிரதமராக வேண்டும் என்று அக்கட்சி எண்ணுவது எந்தவித தவறும் இல்லை.

புல் டவுசரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் இது போன்ற கொச்சையான கருத்துக்களை தான் பேசுவார்கள். ஒரு மாநிலத்தின் முதல்வர் அதுவும் இந்திய அளவில் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வரை மாநில எல்லைக்கு தாண்டி தெரியாது என்றால் பொது அறிவு இல்லாதவர்கள் தான் அப்படி சொல்வார்கள்.

பாரத் ஜோடா யாத்திரை மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு பலன் கிடைத்துள்ளது. ராகுல் காந்தியின் விடா முயற்சியில் கட்சி பலப்படுத்தபட்டுள்ளது. வரும் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி கட்டாயம் ஆட்சி அமைக்கும்.

70 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த ஒரு சாதனையும் நடக்கவில்லை. நான் பிரதமர் ஆன பின்பு தான் சாதனைகள் நடந்துள்ளது என பிரதமர் மோடி அடிக்கடி பேசுவார்.

நாங்கள் தொடங்கிய திட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள் என்று அவர்கள் சொன்னால் நாங்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்கிறோம்.அரசாங்கம் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஒரு அரசாங்கம் செய்வது தான் வரும் அரசாங்கம் செய்யும்.

மதுரை வரும் முதல்வர் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.கீழடி மிக முக்கியமான ஒன்று. இன்றைக்கு இருக்கும் இந்தியாவின் சூழ்நிலையில் சரித்திரத்தை மாற்றி எழுத வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மனப்பான்மையில் தான் மத்திய அரசு உள்ளது.

இந்த உண்மைகள் ஹரப்பாவிற்கு முன்பு வளமான சமுதாயம் இருந்தது என்ற உண்மையைக் கொண்டு வருவது மிக முக்கியம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல கீழடி உலக அளவில் முக்கியம் வாய்ந்தது.

கீழடியை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது சரித்திர கண்ணாடி வாயிலாக பார்க்க வேண்டும். அதற்கு எல்லா முயற்சியும் தமிழக முதல்வர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.கீழடியில் அரசு அருங்காட்சியகம் அமைய உள்ளது என்பதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

karti p chidambaram support stalin

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆதரவு தெரிவித்து கார்த்திக் சிதம்பரம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் வட்டாரத்தில் விசாரிக்கும்போது, ’கார்த்திக் சிதம்பரம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தொடர்ந்து குறிவைத்து வருகிறார். இதனை பலமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுகவின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் தலைவர் பதவியை பெற முடியாது என்பதை அவர் உணர்ந்துள்ளார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் வென்ற ஈவிகேஎஸ் இளங்கோவனும் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவியை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையெல்லாம் மனதில் வைத்துதான் தற்போது திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் என்ன தவறு என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் தனது தந்தை ப.சிதம்பரத்தின் மீது ஸ்டாலினுக்கு நல்ல மரியாதை உள்ளது. அதனையும் பயன்படுத்திகொள்ளவே கார்த்தி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது ஸ்டாலின் மீதான பாசம் எல்லாம் கிடையாது. காங்கிரஸ் தலைவர் பதவிக்காகவே இவ்வாறு பேசியுள்ளார்’ என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர்.

உதவியாளர் கைது: ராஜேந்திர பாலாஜி போல விஜயபாஸ்கருக்கும் குறி?

இணைய முடக்கம் : தொடர்ந்து இந்தியா முதலிடம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *