நேற்று (ஆகஸ்ட் 28)-ஆம் தேதி துபாயில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தேசியக் கொடியை அவமதித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஜெய்ஷாவிற்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்த 148 ரன்களை, 19.4 ஓவர்களில் கடந்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்திய அணி வெற்றி அடைந்ததும் மைதானத்திலிருந்த இந்திய அணி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி ஆரவாரம் செய்தனர்.
இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள் இந்திய அணியின் வெற்றியைக் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
அப்போது பிசிசிஐ செயலாளரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமாக ஜெய்ஷா, இந்திய அணி வெற்றி பெற்றவுடன் எழுந்து நின்று கைதட்டினார்.
அப்போது, அவர் அருகில் இருந்த நபர் ஜெய்ஷாவிடம் தேசியக்கொடியை கொடுத்த போது அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஜெய்ஷா தேசியக்கொடியை அவமதித்து விட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஜெய்ஷாவிற்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “ஜெய்ஷா, நான் உங்களுக்காக வருந்துகிறேன். அவர் யாருடைய மகன் என்பதன் காரணமாக அவருடைய ஒவ்வொரு செயலும் ஆராயப்படுகிறது.
ஜெய்ஷாவினுடைய அனைத்து சாதனைகள் மற்றும் நற்சான்றுகள் அவர் ஒரு முக்கிய நபரின் குடும்ப உறுப்பினர் என்பதால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது” என்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
செல்வம்