விபத்தில் சிக்கிய எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் கார்!

அரசியல்

ஈரோட்டில் பிரச்சாரம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் எம்.பியின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதன்பின்னர் தன்னுடைய காரில் கார்த்தி சிதம்பரம் நள்ளிரவில் கும்பகோணம் சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து வந்து கொண்டிருந்த மினிபஸ் ஒன்று, கரூரிலிருந்த வந்த கார் மீது நேருக்கு நேராக அதிவேகத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார், கார்த்தி சிதம்பரம் எம்.பி பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் கார்த்தி சிதம்பரம் பயணித்த அனைவரும் எந்த காயமுமின்றி தப்பினர். எனினும் மாயனூர் காவல்துறையினருக்கு விபத்து குறித்து தகவல் கொடுத்த கார்த்தி சிதம்பரம், சேதமடைந்த தனது காரை அங்கேயே விட்டுவிட்டு தன்னுடன் வந்த வேறு ஒருவரின் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் கார் விபத்திய சிக்கிய தகவல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நடந்த விபத்து குறித்து கரூர் மாவட்டம் மாயனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் விபத்தில் எந்தவிதமான காயமும் ஏற்படாத நிலையில், இன்று பொன்னமராவதியில் தமிழ்நாடு பொது தொழிலாளர் காங்கிரஸ் சங்கம் 17வது மண்டல மாநாடு நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்பி கலந்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில் கட்சி உறுப்பினர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ்: ஆளுநர் ஆர்.என்.ரவி

எமர்ஜென்சி போராளி முதல் ஆளுநர் வரை:  யார் இந்த சிபிஆர்?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *