முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை தொடர்பாக பேசிய கார்த்தி சிதம்பரம், “கார்த்தி மறக்க மாட்டான்… சும்மா விடமாட்டான்” என்று தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து, முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் இன்று (ஏப்ரல் 7) திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பணிக்கு மத்தியில் கார்த்தி சிதம்பரம் நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
சிவகங்கை தொகுதிக்கான செயல்பாடுகள், இந்தியா கூட்டணி, பாஜக ஆட்சி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி, மகளிர் உரிமை தொகை திட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
அவரிடம், உங்கள் தந்தை ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து நீங்கள் அளித்த ஒரு பேட்டியில், எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என்று கூறியிருக்கிறீர்களே என கேள்வி எழுப்பிய போது,
“கார்த்தி மறக்க மாட்டான்…சும்மா விட மாட்டான்… என்ன ஆகுமென்று எனக்கு தெரியும். சூழல் வரும் போது பாருங்கள்” என்று பதில் அளித்தார்.
2019 ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 106 நாட்களுக்குப் பின் 2019 டிசம்பர் 4ம் தேதி வெளியே வந்தார்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அப்போது தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில்தான் கார்த்தி சிதம்பரம், சூழல் வரும் போது பாருங்கள் என்று கூறினார்.
கார்த்தி சிதம்பரம் பேட்டியின் முழு வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.
நேர்காணல்: பெலிக்ஸ் இன்ப ஒளி
-பிரியா