காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு தான் எழுதியதாக சமூகவலைதளங்களில் பரவும் கடிதம் போலியானது என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சோனியா காந்திக்கு சித்தராமையா கடிதம் எழுதியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்த கடிதத்தில், சித்தராமையா ஆதரவு வேட்பாளர்களுக்கு சிவக்குமார் ஆதரவு வழங்கவில்லை.
கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. இருப்பினும் சிவக்குமார் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் ரகசிய கூட்டணி வைத்து செயல்படுகிறார்.
சிவக்குமார் தன்னை அடுத்த முதல்வர் என்று அவரது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார். பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர் செயல்படுகிறார்.
சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதம் போலியானது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தோல்வி பயத்தால் கர்நாடகா பாஜக என் பெயரில் போலியான கடிதம் உருவாக்கி அவதூறு பரப்பி வருகின்றனர்.
நான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை. காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இதனை நம்ப வேண்டாம். எனக்கும் சிவக்குமாருக்குமான உறவு இணக்கமானது.
அதனை கெடுக்க நினைக்கும் முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்பில்லை. நான் எழுதியதாக போலியான கடிதம் பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
கர்நாடகா தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
கிச்சன் கீர்த்தனா: நன்னாரி சர்பத்