கர்நாடகா அரசியலின் கேம் சேஞ்சர்: யார் இந்த சித்தராமையா?

அரசியல் இந்தியா

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் சித்தராமையா தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மே 13-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டது.

சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருக்குமிடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் தீவிரமான போட்டி நிலவியது.

மே 14-ஆம் தேதி நடைபெற்ற கர்நாடகா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. மே 15-ஆம் ஆம் தேதி சித்தராமையா டெல்லிக்கு சென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் மே 16-ஆம் தேதி டி.கே.சிவகுமார் டெல்லி சென்று மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆகியும் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் கடுமையான இழுபறி நீடித்தது. இந்தசூழலில் கர்நாடக அடுத்த முதல்வர் சித்தராமையா என்று காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்று (மே 18) அறிவித்துள்ளது.

சித்தராமையா 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் தேதி சித்தாராம் கெளடா, பொராமா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு ரமே கெளடா, சித்தே கவுடா என்ற இரண்டு சகோதரர்களும் சிக்கம்மா என்ற சகோதரியும் உள்ளனர்.

இவரது பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். கர்நாடகா மைசூரு மாவட்டத்தில் சித்தராமனஹுண்டி எனும் கிராமத்தில் பிறந்தார். அந்த ஊர் பாரம்பரியத்தின்படி, சித்தராமேஸ்வரர் கோவில் நிலத்தை உழவு செய்த குடும்பங்கள் தங்கள் மகன்களின் ஒருவரை கோவில்களில் நற்பணிகள் செய்ய அர்ப்பணிப்பார்கள்.

சித்தராமையாவின் தந்தை அவரை தேர்ந்தெடுத்தார். இரண்டு ஆண்டுகளாக கோவிலில் நாட்டுப்புற கலைகள் மற்றும் கன்னட மொழியை கற்றுக்கொண்டு மணலில் எழுதி அவர் பயிற்சி பெற்றார்.

karnataka siddaramaiah profile

தனது பள்ளிப்படிப்பை உள்ளூரில் முடித்த சித்தராமையா, மைசூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி மற்றும் சட்டம் பயின்றார். சித்தராமையாவை மருத்துவராக்க அவரது பெற்றோர்கள் விருப்பப்பட்டனர். ஆனால் அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட அவர் சட்டம் படிக்கும் முடிவை எடுத்தார். சிக்கபோரையா என்ற வழக்கறிஞரிடம் சிறிது காலம் ஜூனியராக பணியாற்றினார். 

சித்தராமையா பார்வதியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ராஜேஷ், யத்திந்திரா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு மூத்த மகன் ராஜேஷ் உறுப்பு செயலிழப்பால் தனது 38 வயதில் உயிரிழந்தார்.

சித்தராமையா அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டவர் வழக்கறிஞர் நஞ்சுண்ட சாமி. மைசூரு மாவட்ட நீதிமன்றங்களில் இளம் வழக்கறிஞராக மிகவும் துடிப்புடன் பணியாற்றிய சித்தராமையாவை தேர்தலில் போட்டியிட  நஞ்சுண்ட சாமி ஊக்கம் அளித்தார்.

1983-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய லோக் தளம் கட்சியில் சித்தராமையாவுக்கு சாமுண்டேஷ்வரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதனை கனக்கச்சிதமாக பயன்படுத்திய சித்தராமையா தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று பலரது கவனத்தையும் பெற்றார். 

karnataka siddaramaiah profile

இதனை தொடர்ந்து ஆளும்  ஜனதா தளம் கட்சியில் அவர் இணைந்தார். கன்னட மொழியை அதிகாரப்பூர்வமான மொழியாக செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பொறுப்பு சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது.

1985-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் சாமுண்டேஷ்வரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே அமைச்சரவையில் அவருக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. 

1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜசேகர் மூர்த்தியால் தோற்கடிக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்த சித்தராமையா 1992-ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1994-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜனதா தளம் கட்சியில் முதல்வர் தேவ கவுடா தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். 1996-ஆம் ஆண்டு தேவ கவுடா இந்திய பிரதமரானார். இதனால் ஜெ.ஹெச்.பட்டேல் கர்நாடகாவின் முதல்வராகவும் சித்தராமையா துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

ஜனதா தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டவுடன் தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்து சித்தராமையா மாநில செயலாளரானார். 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சித்தராமையா தோல்வி அடைந்தார்.

2004-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் தரம் நாராயண் சிங் முதல்வரானார். சித்தராமையா இரண்டாவது முறையாக துணை முதல்வரானார். 

karnataka siddaramaiah profile

2005-ஆம் ஆண்டு தேவகவுடாவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஏபிபி ஜேடி என்ற புதிய கட்சியை துவங்கும் நோக்கத்தில் இருந்தார் சித்தராமையா.

புதிய கட்சி துவங்கினால் அது எந்த அளவுக்கு தமக்கு கைகொடுக்கும் என்று எண்ணினார். தன்னுடைய 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தீவிரமான காங்கிரஸ் எதிர்ப்பை கடைபிடித்து வந்த சித்தராமையா புதிய கட்சி துவங்கும் நோக்கத்தை கைவிட்டு பெங்களூரில் தனது ஆதரவாளர்களுடன் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

இதனை தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருணா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சித்தராமையாவை தோற்கடிக்க முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் எடியூரப்பா, தேவகவுடா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அத்தனை பிரச்சாரங்களையும் முறியடித்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் ஷிவபாசப்பாவை 257 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வருணா தொகுதியில் இருந்து சித்தராமையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்ற அவரின் கனவு பொய்த்து போனது. இதனால் 2013-ஆம் ஆண்டு தேர்தலுக்கு சித்தராமையா தீவிரமாக ஆயத்தமானார்.

இந்த தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 40 ஆண்டுகளாக கர்நாடக அரசியல் களத்தில் ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த முதல்வர் என்ற பெயரை பெற்றார் சித்தராமையா.

சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளால் மக்கள் சாதி, மத ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஜோதிடம், மாந்திரீக செயல்பாடுகளால் நரபலி கொடுக்கப்படுகிறது என்று மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை 2017-ஆம் ஆண்டு சித்தராமையா கொண்டு வந்தார்.

இந்த சட்டம் இந்து மதத்திற்கு எதிரானது என்று பாஜக மற்றும் கர்நாடகா மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் சித்தராமையா நிறைவேற்றினார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 7 கிலோ இலவச அரிசி, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம், இந்திரா கேண்டீன் போன்ற முக்கிய திட்டங்களை அமல்படுத்தி மக்களின் பாராட்டுக்களை பெற்றார். அதே நேரத்தில் விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பிரச்சனை போன்றவை 2018 சட்டமன்ற தேர்தலில் முக்கிய பிரச்சனைகளாக மாறியது.

karnataka siddaramaiah profile

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வருணா தொகுதியில் தனது மகன் யாத்திந்திராவை சித்தராமையா களமிறக்கினார். இவர் சாமுண்டேஷ்வரி மற்றும் பதாமி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இது தான் எனது கடைசி தேர்தல் என்று பொதுக்கூட்டத்தில் பேசி தனது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

சாமுண்டேஷ்வரி தொகுதியில் தோல்வியடைந்த சித்தராமையா பதாமி தொகுதியில் வெற்றி அடைந்தார். யாத்திந்திரா வருணா தொகுதியில் வெற்று பெற்றார். இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த ஆட்சி ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம்  சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்ததால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. எடியூரப்பா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வருணா தொகுதியில் சித்தராமையா மீண்டும் களமிறங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூறியதை போல இந்த முறையும் இது தான் எனது கடைசி தேர்தல் என்றார் சித்தராமையா.  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆளும் பாஜகவிற்கு எதிராக  அனைத்து துறைகளிலும் 40 சதவிகித கமிஷன், ஹிஜாப் பிரச்சனை, முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து என  தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

2018-ஆம் ஆண்டை போலவே இந்த தேர்தலிலும் தொங்கு சட்டமன்றம் அமையும் என பல தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியானபோதும், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். மே 13-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளிலும் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை எதிரொலித்தது. 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மீண்டும் சித்தராமையா இரண்டாவது முறையாக வரும் மே 20ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

செல்வம்

மதத் தலைவர்கள் வெளியிட்ட “பாய் – ஸ்லீப்பர் செல்ஸ்” போஸ்டர்!

தேனாறு ஓடும் என்றார்கள்… சாராய ஆறுதான் ஓடுகிறது: எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *