எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மகாராஷ்டிரா பதிலடி கொடுத்துள்ளது.
கர்நாடகாவும், மகராஷ்டிராவும் அண்டை மாநிலமாக உள்ளன. இந்த இருமாநிலங்களின் எல்லையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. மொழி வாரி மாநிலங்களாக கர்நாடகா உருவான போது பாம்பே பிரசிடென்சியில் இருந்த பெலகாவி கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
இதனால், மராட்டியம்- கர்நாடகம் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மராட்டியத்தில் உள்ள பெலகாவியை, மராட்டிய மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசு அமைத்த குழுவும், பெலகாவி மாவட்டம் கர்நாடகாவுக்கே சொந்தம் என்று அறிக்கை கொடுத்தது. இருப்பினும், பெலகாவியில் வசிக்கும் எம்இஎஸ் அமைப்பு உள்ளிட்ட மராட்டிய அமைப்புகள் கர்நாடக அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக, அதிருப்தி சிவசேனா அணியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனால் எல்லை பிரச்சனையில் மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட இருமாநில முதல்வர்களையும் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி டெல்லிக்கு வரவழைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
’’இந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க 6 அமைச்சர்கள் அடங்கிய குழுவை இரு மாநிலங்களும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ’எல்லை பிரச்சினை என்பது அரசியல் சாசனத்தின் படியே தீர்க்க வேண்டும்; இதற்கு இருமாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தினார்.
இருமாநில எல்லை விஷயத்தில் அமித்ஷா தலையிட்டுள்ளதால் அமைதி நிலவும் என்று எதிர்பார்த்த வேளையில், மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடக சட்டசபையில் எல்லைப் பிரச்சினை மீதான விவாதத்தின்போது, எல்லைப் பிரச்சினையில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை இருஅவைகளில் தீர்மானமாக நிறைவேற்ற முதல்வர் பசவராஜ் பொம்மை பரிந்துரை செய்ததுடன், ’பெலகாவியில் இருந்து ஒரு அங்குல இடத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதற்கு மகாராஷ்டிராவும் பதிலடி கொடுத்துள்ளது. எல்லைப் பிரச்சினையில் கர்நாடக முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசுவதை தொடர்ந்தால், மராட்டிய அணைகளில் இருந்து தண்ணீர் வழங்க மாட்டோம் என்று மராட்டிய அமைச்சர் சம்புராஜ் தேசாய் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”பசவராஜ் பொம்மை அரசியலமைப்பு பதவியில் உள்ளார். அவர் பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது முதல்வர் மிரட்டும் வகையில் பேசுவது நல்லதல்ல. அதை, அவர் நிறுத்த வேண்டும். அதே மொழியில் மராட்டியத்தாலும் பதிலடி கொடுக்க முடியும். எங்களை, அவர் தூண்டிவிடக் கூடாது. மராட்டியம் பொறுமை காத்து வருகிறது.
அதை கர்நாடக முதல்வர் நினைவில் வைக்க வேண்டும். கோடைக் காலத்தில் மராட்டியத்தின் கிருஷ்ணா, கொய்னா அணைகளின் நீரை நம்பி அந்த மாநிலம் உள்ளது. எனவே, எல்லைப் பிரச்சினையில் இதுபோல பேசுவதை கர்நாடகம் நிறுத்தவில்லை எனில், மராட்டியமும் அண்டை மாநிலத்துக்கு தண்ணீர் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரும். எல்லையில் வசிக்கும் மராத்தி பேசும் மக்களுடன் மராட்டியம் உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
அம்பேத்கர் அவமதிப்பு: இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு குண்டாஸ்!
சிவகார்த்திகேயனுக்கு எதிராக மனு: நீதிமன்றம் அதிரடி!