2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இணைப் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஆட்சி நடத்தி வரும், 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலை இந்த ஆண்டு மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டது பாஜக. கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று (பிப்ரவரி 4) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”தேசிய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராகவும், தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இணைப் பொறுப்பாளராகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான் ஏற்கனவே 2011-2013 வரை பாஜக கர்நாடகாவின் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2011 ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி 2019 ஆம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார்.
வரும் ஏப்ரல் மாதம் முதல் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதற்காக பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் மூலமாக அவர் செய்து வரும் நிலையில், தற்போது அண்ணாமலையை கர்நாடக சட்டமன்ற தேர்தல் இணைப் பொறுப்பாளராக நியமித்துள்ளது தமிழக பாஜக நிர்வாகிகளிடையே ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தமிழ்நாடு பாஜகவை வலிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அண்ணாமலையை கர்நாடகத்திற்கு இணைப் பொறுப்பாளராக நியமித்திருப்பதன் பின்னால் தமிழக பாஜக தலைமையில் மாற்றம் இருக்குமோ என்றும் பேச்சுகள் கிளம்பிவிட்டன.
ஆனால், அண்ணாமலை தரப்பிலோ, “கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதத்திற்குள் முடிந்து விடும். எனவே, இந்த 4 மாதங்களில் அண்ணாமலைக்கு சற்று கூடுதல் பணி பளு இருக்கும். அண்ணாமலையின் செயல்பாட்டைப் பார்த்து அகில இந்திய பாஜக அவருக்குக் கொடுத்திருக்கும் பரிசு தான் இந்த தேர்தல் இணைப் பொறுப்பாளர். இதை வைத்து தமிழக பாஜகவில் மாற்றம் வரும் என்பதெல்லாம் அண்ணாமலையை விரும்பாதவர்களின் நப்பாசை” என்கிறார்கள்.
வேந்தன், மோனிஷா