கர்நாடகாவில் ஐந்து கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது அங்குள்ள மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஐந்து கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. மீதம் வழங்க வேண்டிய ஐந்து கிலோ இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிலோவுக்கு 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகையானது ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
இது தற்காலிக ஏற்பாடு மற்றும் அரிசி கொள்முதல் செய்யும் வரை மாற்று வழி என்றும் கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால், ஐந்து கிலோ இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கர்நாடக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்“ஐந்து கிலோ அரிசி கூடுதலாகக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்த கர்நாடக காங்கிரஸ் அரசு அதற்கு பதிலாக ரூபாய் 170-ஐ பணமாகக் கொடுப்பதாகக் கூறியுள்ளது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்.
வாக்குறுதி வழங்குவதற்கு முன் அரிசியைக் கொள்முதல் செய்ய முடியுமா என்றுகூட திட்டமிடாமல், சிந்திக்காமல் அறிவித்துவிட்டு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்,
அரிசியைக்கூட வழங்க முடியவில்லையெனில், அந்த அரசு இருந்து என்ன பயன்? ஆட்சி, அதிகாரத்துக்காக பொய் சொல்லி, ஏமாற்றி மோசடி செய்த காங்கிரஸ் அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜ்
மாணவிகள் வாட்சப் டி.பி : மகளிர் ஆணைய தலைவி எச்சரிக்கை!
விண்ணில் பாய சந்திரயான்-3 தயார்: இஸ்ரோ அறிவிப்பு!