கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா. அதேசமயம் காங்கிரஸுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் மாநிலமும் கர்நாடகா தான்.
பாஜக ஆட்சியில் இருந்தாலும் இதுவரை அக்கட்சி கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் வென்றதில்லை.
முந்தைய தேர்தல் முடிவுகளை பார்ப்போம்

1972, 1978 ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது.
1983ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனதா தளம் கட்சி 95 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ராமகிருஷ்ண ஹெக்டே முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார்.
1989ஆம் ஆண்டு தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 139 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது ஜனதா தளம் கட்சி. காங்கிரஸ் 65 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், பாஜக, மார்க்சிஸ்ட் தலா 2 இடங்களிலும், சுயேட்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றன.
1994 தேர்தலில் ஜனதா தளம் கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் பெரிய கட்சியாக இருந்தது. முந்தைய தேர்தலில் வெறும் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த தேர்தலில் தனது பலத்தை அதிகரித்து 40 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் 34 இடங்களையும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 35 இடங்களையும் பிடித்தன.
இதைத்தொடர்ந்து மீண்டும் 1999ஆம் ஆண்டு தீவிரமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ் அந்த ஆண்டு நடந்த தேர்தலில் 132 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜக 44 இடங்களையும், ஒருங்கிணைந்த ஜனதா தளம் 18 இடங்களையும், அதிலிருந்து பிரிந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் 10 இடங்களையும் பிடித்தன.
2004ஆம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. பாஜக 79, காங்கிரஸ் 65, மதச்சார்பற்ற ஜனதா தளம் 58, ஒருங்கிணைந்த ஜனதா தளம் 5 மற்ற கட்சிகள் 17 இடங்களை பிடித்தன. இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் முதலில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியும் , 2008க்கு பிறகு பாஜக – மதச்சார்பற்ற ஜனதா தள் கூட்டணியும் ஆட்சியில் இருந்தன.
தொடர்ந்து 2008ல் முதன் முறையாக பாஜக 100க்கும் அதிகமான இடங்களை பிடித்தது. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் 110 இடங்களில் வெற்றி பெற்று சுயேச்சைகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 80 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 28 இடங்களையும், மற்றவை 6 இடங்களையும் பிடித்தன.
2013 தேர்தலில் 122 இடங்களை பிடித்து அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது காங்கிரஸ். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும், பாஜகவும் 40 இடங்களை வென்றன. மற்றவை 21 இடங்களில் வென்றன.
2018 தேர்தலில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 37 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் பிடித்தன. தற்போது பாஜக ஆட்சி கர்நாடகாவில் நடந்து வருகிறது. இந்த 5 ஆண்டுகால சட்டப்பேரவை காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது.
மேற்குறிப்பிட்ட 10 சட்டமன்றத் தேர்தல்களில் 4 முறை காங்கிரஸும், 3 தேர்தலில் ஜனதா தள கட்சியும், 3 முறை பாஜக கூட்டணியும் ஆட்சி அமைத்தன.
கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?
இந்நிலையில் 2023 மே மாதத்துடன் நிறைவடையும் கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரும் என கூறுகின்றன. ஸ்மால் பாக்ஸ் இந்தியா, இதற்கு முன்னதாக நடைபெற்ற நாகாலாந்து, மேகாலயா குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்திருந்தது.
இந்நிறுவனத்தின் கருத்து கணிப்புப் படி, காங்கிரஸ் 118-129, பாஜக 65-70, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 28-32, மற்றவை 1-3 இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளது.
லோக் போல் அமைப்பு கருத்து கணிப்பு படி, காங்கிரஸ் 116 – 122, பாஜக 77 – 83, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 21 – 27, மற்றவை 1 – 4 இடங்களை பிடிக்கும்,
சர்வே ட்விஸ்ட்
சி-வோட்டர் – ஏபிபி கருத்துக்கணிப்பு படி, 115-127 இடங்களை பிடித்து காங்கிரஸ் ஆட்சியமைக்கும். 68-80 இடங்களுடன் பாஜக இரண்டாம் இடத்தை பிடிக்கும். மதச்சார்பற்ற ஜனதா தளம 23-35 இடங்களை பிடிக்கும்,
இதில், 57 சதவிகித மக்கள் மாநில அரசு மீது கோபத்தில் இருப்பதாகவும், ஆட்சி மாற வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர். 17 சதவிகித மக்கள் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறியதாகவும் சி வோட்டர் கூறியுள்ளது.
எனினும் 47 சதவிகிதம் பேர் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு மிக மோசம் என்றும் பிரதமர் மோடியின் கீழ் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாகவும் பதிலளித்திருக்கின்றனர்.
அதுபோன்று ஜீ நியூஸ்-மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு படி, 37 சதவிகித மக்கள் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், 23 சதவிதம் பேர் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, கர்நாடகா தேர்தலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று 21 சதவிகித மக்களும், பயன் இருக்காது என்று 41 சதவிகித மக்களும் ஜீ கருத்து கணிப்பில் கூறியிருக்கின்றனர்.
ஜீ கருத்துக்கணிப்புகள், பெரும்பான்மயை பாஜக பிடிக்கவில்லை என்றாலும், 96-106 இடங்களை பிடித்து பாஜக வெற்றி பெறும், காங்கிரஸ் 88-98 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 23-33 இடங்களையும் பிடிக்கும் என்று கூறுகின்றன.
மேற்குறிப்பிட்ட கருத்துக்கணிப்புகளின் படி கர்நாடகா மக்களின் ஆதரவு காங்கிரஸுக்கே இருப்பதாக தெரியவருகிறது.
பாஜகவுக்கு பின்னடைவு ஏன்?
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்வதற்கான டெண்டர் விவகாரத்தில் 40 லட்சம் ரூபாய் கேட்டு பாஜக எம்.எல்.ஏ.வான மாடல் விருபாக்ஷப்பா, அவரது மகன் பிரசாந்த் இருவரும் சிக்கிக்கொண்டனர். இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், பாஜக மீது ‘40 சதவிகிதம் கமிஷன்’ என்ற ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி பிரச்சாரம் செய்து வருகிறது.
இரண்டாவதாக சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, இனி ஒக்கலிகர் சமூகத்தவருக்கு 2 சதவீதம், லிங்காயத்துகளுக்கு 2 சதவீதம் என அதிகரித்து வழங்கப்படும் என பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு அறிவித்ததும் தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
அதுபோன்று சமையல் சிலிண்டர் மற்றும் எரிவாயு விலை உயர்வை காங்கிரஸ் கையிலெடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்வதும் பாஜகவுக்கு பின்னடைவாக உள்ளது.
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து நடந்த வன்முறையும் பாஜக அரசு மீது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடுப்பி மாவட்டம் கௌப்பில் உள்ள ஹோசா மரிகுடி கோயிலில் கடை வைக்க முஸ்லீம்களுக்கு ஏலம் விடக் கூடாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்ததும் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில் சி வோட்டர் ஏபிபி கருத்துக்கணிப்பில் இந்த தேர்தலில் ஹிஜாப் விவகாரம் மற்றும் மத பிரச்சினை 55.6 சதவிகிதம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14.6 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டுடனான காவிரி பிரச்சினை பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.
அதேசமயம் காங்கிரஸ் அதானி விவகாரம், பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்தசூழலில் அனைத்து விவகாரங்களையும் கடந்து இந்த தேர்தலிலாவது அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற, 150 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவை பொறுத்தவரை 1989 தேர்தலுக்கு பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை. எனவே கருத்துக்கணிப்பு படி காங்கிரஸ் வெற்றி பெறுமா அல்லது பாஜக ஆட்சியை தக்க வைக்குமா என்பது வரும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.
பிரியா
குட்டி ரசிகைக்கு கியூட் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்!
பள்ளிக்கல்வி துறைக்கு புதிய 26 அறிவிப்புகள்!