நாளை (மே 12) கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 224 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. தொங்கு சட்டமன்றம் அமையலாம் எனவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல்வர் பதவி டி.கே.சிவக்குமாருக்கா, அல்லது சித்தராமையாவுக்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் சிவக்குமாருக்குத்தான் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #DKforCM என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
முன்னதாக கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து அவர் கூறுகையில், “மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று கூறியிருந்தார்.
அதன்படி காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றும் முதல்வர் பதவி தொடர்பாகவும் அவர் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
பிரியா
விமானத்தை சேதப்படுத்திய யூடியூபர்: 20 ஆண்டுகள் சிறையா?
பிடிஆரை சந்தித்த நிதித்துறை அதிகாரிகள்!