கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 மணி நிலவரப்படி 136 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “கர்நாடகா தேர்தலில் மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்த கர்நாடகா மக்களுக்கு வணக்கங்கள். சர்வாதிகாரமான அரசியலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் விரும்பும்போது எந்த ஒரு மைய அதிகாரமும் ஆதிக்கம் செலுத்த முடியாது. அது தான் கதையினுடைய நீதியும் நாளைக்கான பாடமாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராஜா, “கர்நாடகா மக்கள் வெறுப்பு மற்றும் பிளவு அரசியலை நிராகரித்துள்ளனர்.
மோடி, அமித்ஷாவின் பிரச்சாரம் முக்கிய பிரச்சனைகளை புறக்கணித்து பிளவுப்படுத்தும் அரசியலை முன்னெடுத்தனர். அவர்களது பிரச்சாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை 215 இடங்களில் ஆதரித்து மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் பங்களித்தது. மோடி என்ற மாயை உடைந்துவிட்டது.
காங்கிரஸ் சார்பில் மக்களுக்கு இணக்கமான ஆட்சியை எதிர்பார்க்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக உருவாக்கியுள்ள பிளவு அரசியல் களையப்பட வேண்டும். 2024-ஆம் ஆண்டு பாஜகவை எதிர்கொள்ள ஒற்றுமை கட்டமைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அருவருப்பான வகுப்புவாத பிரச்சாரத்தை உறுதியாக நிராகரித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், “கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
காந்தியை போல நீங்கள் மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளீர்கள். அவரை போல அன்பினால் உலகத்தை அசைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்து காட்டியுள்ளீர்கள்.
உங்களது நம்பிக்கையான அணுகுமுறை மக்களுக்கு புதிய சுவாசத்தை கொடுத்துள்ளது. பிரிவினையை நிராகரிக்க நீங்கள் கர்நாடக மக்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள்.
அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து பதிலடி கொடுத்துள்ளனர். உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“திராவிட நிலப்பரப்பில் பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது”: ஸ்டாலின்
