கர்நாடகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் கமிஷன் இல்லாமல் மாநிலத்தில் எதையும் செய்ய முடிவதில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே கர்நாடக அரசுதான் அதிக ஊழல் செய்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார். ஒவ்வொரு தனியான பரிவர்த்தனைக்கும் 40 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார்கள் என்று கூறுகிறார்.
இதே குற்றசாட்டை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்திலும் காங்கிரஸ் ஈடுபட்டது.
காங்கிரஸை விமர்சித்து பிரச்சாரம் மற்றும் ரோட் ஷோவில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தனது ஆட்சியில் 85 சதவிகிதம் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அனல் பிரச்சாரங்கள் ஓய்ந்து நாளை தேர்தலுக்கு மக்கள் தயாராகிவரும் நிலையில், கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் மாநில பாஜக அரசு மீது முக்கிய குற்றசாட்டை வைத்துள்ளது.
இதுகுறித்து இன்று (மே 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆட்சியில் 40 சதவிகிதம் கமிஷன் இல்லாமல் எதுவும் நடைபெறுவதில்லை. அரசு ஒப்பந்தங்களுக்கு பெறப்பட்ட 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோயிருக்கின்றன. மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் கூட இல்லாத நிலையில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
‘என் ரோஜா நீயா’ : சமந்தாவை காதலிக்கும் விஜய் தேவரகொண்டா
அடுத்த 2 மணி நேரத்தில்… 19 மாவட்டங்களுக்கு மழை!