கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதல் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூரு வருமாறு கர்நாடகா காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகள் முடிவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.
அதனையடுத்து தற்போது இயந்திர வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றது. இதிலும் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் இருந்து வருகிறது.
கனகபுரா தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார், வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தாரமையா, காந்திநகர் தொகுதியில் தினேஷ் குண்டுராவ், தமிழர்கள் நிறைந்த பகுதியான கோலார் தங்கவயல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபகலா உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
ஆட்சி அமைக்க 113 இடங்கள் போதும் என்ற நிலையில் 120க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது.
இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் ஆடி வருகின்றனர்.
மேலும் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று பெங்களூருவுக்கு வரவேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது கட்சித்தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடகா தேர்தல்: 9 மணி முன்னிலை விவரம்!
என்னை எந்த கட்சியும் தொடர்பு கொள்ளவில்லை : குமாரசாமி