கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸ்: கண்ணீருடன் நன்றி தெரிவித்த சிவகுமார்

Published On:

| By christopher

தேர்தலில் இமாலய வெற்றியை கொடுத்த மக்களின் காலைத் தொட்டு வணங்குவதாக கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டிகே. சிவக்குமார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) நடைபெற்று வருகிறது. இதுவரை 50 தொகுதிகளில் வெற்றியுடன் 134 இடங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இதனால் கர்நாடகவில் தனிபெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலரும் கர்நாடக மக்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

karnataka congress leader thanked

மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள்

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டியில், ”கர்நாடகத்தில் நடைபெற்ற பாஜகவின் மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். ” என்றார்.

மேலும் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக செயல்பட்டதாகவும், மக்கள் காங்கிரஸின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடியின் ஆசீர்வாதம் வேண்டாம்!

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் உறுதியான நிலையில் காங்கிரஸ் வெற்றியுடன், பிரதமர் தோல்வி என்பதும் உறுதியாகி விட்டது.

வாழ்வாதாரம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் துயரம், மின்சாரம், வேலையின்மை மற்றும் ஊழல் போன்ற உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் போராடியது. ஆனால் இதற்கு மாறாக மக்களிடம் பிரிவினையை புகுத்தி வாக்கு சேகரித்தார் மோடி. ஆனால் பெரும் தோல்வியை பாஜகவுக்கு அளித்ததன் மூலம் மூலம் மோடியின் ஆசீர்வாதம் தங்களுக்கு வேண்டாம் என்று கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர்.” குறிப்பிட்டுள்ளார்.

karnataka congress leader thanked

மக்களின் காலை தொட்டு வணங்குகிறேன்!

தேர்தலில் இமாலய வெற்றியை கொடுத்த மக்களின் காலைத் தொட்டு வணங்குவதாக கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டிகே. சிவக்குமார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

கர்நாடகவில் கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட டி.கே. சிவக்குமார்,  தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கை விட 59.709 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பெரும்பான்மையுடன் ஆட்சி!

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் வெற்றி குறித்து பேசுகையில், “கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடியின் பிரசாரம் எடுபடவில்லை. மோடியோ, அமித்ஷாவோ, ஜே.பி. நட்டாவோ கர்நாடகாவுக்கு எத்தனையோ முறை வந்தும் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஏனென்றால் கர்நாடக மக்கள் பா.ஜனதாவின் ஊழல், தவறான நிர்வாகத்தால் அலுத்துவிட்டனர். அதற்கேற்ப தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும்.” என்று சித்தராமையா கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

கர்நாடகாவில் வெற்றி: சோனியா, ராகுலுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel