தீபாவளி பரிசு: கர்நாடக அரசுமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!
தீபாவளி கொண்டாட்டத்தின்போது கர்நாடக மாநில முதல்வர் அலுவலகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்புடன் பணம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை அம்மாநில காங்கிரஸ் கமிட்டி கடுமையாக கண்டித்ததுடன், அக்கட்சி, ‘இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ எனவும் கோரியுள்ளது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீபாவளியன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளை அனுப்பியதாகவும், அதை சில பத்திரிகையாளர்கள் வாங்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதன்மூலம் கர்நாடக பாஜக அரசு லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறது என குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், ’அவர்கள்மீது ஊழல் வழக்குப் பதிவுசெய்யவும், கர்நாடக முதல்வர் ராஜினாமா செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த முறை முதல்வர் நேரடியாக பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. அவர் கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் ’1 லட்சம் ரூபாய் தீபாவளி பரிசு’ என்ற பெயரில் லஞ்சமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிகையாளர்களுக்கு தலைவணங்குகிறேன்.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு லஞ்சம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல. பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு லஞ்சமளிக்க முதல்வருக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
மக்களின் பணத்தை லஞ்சமாக பாஜக அரசு வழங்க முயற்சிக்கிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், “40 சதவீத ஊழல் நிறைந்த பசவராஜ் பொம்மை அரசு இப்படிச் செய்ய முயற்சிப்பது இது முதல்முறையல்ல. கர்நாடக மக்கள் தொடங்கியுள்ள “PayCM” பிரசாரத்தால் கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு பிரபலமடைந்துள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சியில், ஆட்சேர்ப்பு, பணியிடங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் லஞ்சம் நடந்துள்ளது.
முதல்வர் லஞ்சத்தில் ஈடுபட்டால், மாநிலத்தை யார் காப்பார்கள்? பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை. லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பசவராஜ் பொம்மை உடனடியாக பதவி விலக வேண்டும்” என்றார்.
”இதுதொடர்பாக லஞ்சமாக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பெறப்பட்டது, எவ்வளவு திருப்பிக் கொடுக்கப்பட்டது என்பதை மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” எனவும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.
முன்னதாக சுர்ஜேவாலா, கடந்த 28ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “40 சதவீத ஊழல் அரசு, பத்திரிகையாளர்களுக்கு 1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயல்கிறது. பசவராஜ் பொம்மை இதற்குப் பதிலளிப்பாரா?” எனப் பதிவிட்ட அவர், அதற்குக் கீழ் 3 கேள்விகளையும் கேட்டிருந்தார்.
1. முதல்வர் வழங்குவது ’லஞ்சம்’ இல்லையா? 2. 1,00,000 எங்கிருந்து வந்தது? பொதுக் கருவூலத்தில் இருந்து வந்ததா அல்லது முதல்வரிடமிருந்து வந்ததா? 3. அமலாக்கத்துறை/ வருமானவரித்துறை கவனிக்குமா?” என அதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம் : அதிகரிக்கும் உயிர்பலி!
டீசல் இல்லாமல் நின்ற ஆம்புலன்ஸ்: சாலையோரத்தில் நடந்த பிரசவம்!