வைஃபை ஆன் செய்ததும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் வெற்றி பெற்ற செய்திகளும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“மே 10 ஆம் தேதி நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. இதில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 136 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வெறும் 65 இடங்களையே வென்று ஆட்சியை இழந்துள்ளது.
இந்த வெற்றி குறித்து இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரிடம் தொலைபேசியில் பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இந்திய அளவிலான பாராளுமன்ற தேர்தல் வெற்றியாக மாற்றுவது குறித்தும் அப்போது தனது ஆலோசனைகளையும் கருத்துகளையும் ஸ்டாலின் சோனியா காந்தியிடம் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்ற போது தேசிய தலைவர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில்… ‘பாஜகவை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி என்பது கதைக்கு உதவாது. காங்கிரஸ் இல்லாமல் கரைசேர முடியாது’ என்று ஸ்டாலின் பேசினார். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணி என்ற ஸ்டாலினுடைய இந்த வியூகம் இந்திய அளவில் வரவேற்றுப் பேசப்பட்டது.
இந்த நிலையில் இப்போது கர்நாடகாவில் பெற்ற வெற்றியை இந்திய அளவில் கொண்டு செல்வதற்கு காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் கர்நாடகாவின் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
கர்நாடக புதிய முதல்வர் பதவியேற்பு விழா இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெற கூடும். அந்தப் பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெங்களூர் சென்று கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.
இந்தப் பதவியேற்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கான பொது மேடையாக ராகுல் காந்தி ஆக்குவாரா என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் பேசிய ராகுல் காந்தி, ‘வெறுப்பின் கதவுகள் அடைக்கப்பட்டு அன்பின் கதவு திறந்துள்ளது’ என்றார். இந்த அன்பின் அரசியல் கதவுகளை அவர் பாஜக அல்லாத அனைவருக்கும் திறப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி போன்ற காங்கிரசிடம் இருந்து சற்று தள்ளி இருக்கும் தலைவர்களையும் புதிய கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு அழைத்து 2024க்கான பாஜகவுக்கு எதிரான ஒரு மெகா பொது கூட்டணியை ராகுல் காந்தி அமைக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் விருப்பம்.
இதை காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் எப்படி அணுகப் போகிறார்கள் என்பதை பொருத்து 2023 கர்நாடக வெற்றி 2024 இந்திய வெற்றியாக மாறும்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
கர்நாடகா தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்