கர்நாடகா தேர்தல்: ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா…சொதப்பிய பாஜக

Published On:

| By Selvam

கர்நாடகாவை ஊழலற்ற தென்னிந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் என்று கடந்த வாரம் அமித்ஷா பேசியிருந்தார். இந்தநிலையில், பாஜக எம்.எல்.ஏ மடல் விருபாக்ஷப்பா மகன் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்தா காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.

karnataka bjp mla son bribe rs 40 lakh rs 6 crore seized residence

கர்நாடகா தாவங்கரே மாவட்டம் சன்னகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மடல் விருபாக்ஷப்பா. இவர் மாநில பொதுத்துறை நிறுவனமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் தலைவராக இருக்கிறார். இவருடைய மகன் பிரசாந்த் மடல், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் தலைமைக் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி பிரசாந்த் மடல், அவரது தந்தையின் அலுவலகத்தில் வைத்து சோப்பு தயாரிப்பதற்கான மூலப்பொருள் வாங்குவதற்கான டெண்டர் ஒதுக்குவதற்கு ஒப்பந்ததாரர் ஷ்ரேயாஸ் காஷ்யப்பிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கர்நாடகா லோக் ஆயுக்தா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

karnataka bjp mla son bribe rs 40 lakh rs 6 crore seized residence

இதனை தொடர்ந்து லோக் ஆயுக்தா, எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியும், மகன் பிராசாந்த் மடல் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.6.10 கோடியும் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஒப்பந்ததாரர் ஷ்ரேயாஸ் காஷ்யப் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவதற்காக பிரசாந்த் மடல் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிராசாந்த் மற்றும் நான்கு பேரை லோக் ஆயுக்தா காவல்துறை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர் மடல் விருபாக்ஷப்பாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், மடல் விருபாக்ஷப்பா கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

மடல் விருபாக்ஷப்பாவை கைது செய்ய வலியுறுத்தி நேற்று கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பேசிய அவர், “பசவராஜ் பொம்மைக்கு கண்ணியம் இருந்தால், மடல் விருபாக்ஷப்பாவை உடனடியாக கைது செய்து, தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

karnataka bjp mla son bribe rs 40 lakh rs 6 crore seized residence

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.சிவக்குமார், பாஜக 40 சதவீத கமிஷன் அரசு என்பது விருபாக்ஷப்பா மகன் லஞ்சம் வாங்கியதன் மூலம் தெரியவந்துள்ளது என்று விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, “ஊழலை தடுப்பதற்காக கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அமைப்பை பாஜக அரசு அமைத்துள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பு இல்லாத காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாரமட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் பெல்லாரியில் நடைபெற விஜய் சங்கல்ப் நடைபயணத்தை துவங்கி வைத்த அமித்ஷா, “பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பாவை நம்புங்கள். கர்நாடகாவை ஊழலற்ற, தென்னிந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம்.” என்று பேசியிருந்தார்.

அவர் ஊழலுக்கு எதிராக பேசிய ஒரு வாரத்தில் எம்.எல்.ஏ மற்றும் அவரது மகன் ஊழலில் ஈடுபட்டது கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியவர் கைது!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வருகிறது Whatsapp-ன் புதிய அப்டேட் !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel