கர்நாடகா அமைச்சர் சோமண்ணா பொது நிகழ்ச்சியில் தன்னிடம் புகார் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் குண்ட்லுப்பேட்டை தாலுகாவில் உள்ள ஹங்கலா கிராமத்தில் நேற்று (அக்டோபர் 22) வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கர்நாடகாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் கலந்து கொண்டு 175 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.
அப்போது கெம்பம்மா என்ற பெண் நிகழ்ச்சி நடைபெறும் மேடையில் ஏறி வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான தேர்வு முறையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறினார். மேலும் வருவாய்த் துறையின் கீழ் தனக்கு நிலம் வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அமைச்சர் அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். பின்னர் அமைச்சர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி மாலை 3.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் 2 மணி நேரம் தாமதமாக வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அமைச்சர் சோமண்ணா அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி சர்ச்சையில் சிக்கினார்.
அவரிடம் ஒரு பெண் தனது வீடு ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி இடிக்க முயல்வதாகப் புகார் கூறி மனு அளிக்க வந்திருந்தார்.
அந்த பெண்ணை சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டிய வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
கோவை கார் விபத்து சதியா ? – டிஜிபி பதில்!