கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 29) அறிவித்தது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதன்படி 224 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் : ஏப்ரல் 13
மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 20
பரிசீலனை : ஏப்ரல் 21
வாபஸ் பெற கடைசி நாள் : ஏப்ரல் 24
தேர்தல் நாள் : மே 10
தேர்தல் முடிவுகள் : மே 13
ஆகிய அட்டவணையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தற்போது பாஜக ஆளுங்கட்சியாக இருக்கிறது. பசவராஜ் பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். கர்நாடக ஆளுங்கட்சியான பாஜகவுக்காக பிரதமர் மோடி கடந்த சில மாதங்களில் அடிக்கடி கர்நாடகாவுக்கு வந்து பல்வேறு புதிய நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட பணிகளை துவங்கி வைத்தும் சென்றார்.
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. அதேநேரம் கர்நாடக சம்பவத்தால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளமும் முக்கியமான கட்சியாக களத்தில் இருக்கிறது.
–வேந்தன்
பல் பிடுங்கிய புகார்… ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் : ஸ்டாலின் அதிரடி!
நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தேர்தல்: திருச்சி சிவா முதலிடம்!