லடாக் கார்கில் கவுன்சில் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தாக்கம்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
லடாக்கின் கார்கில் மலை கவுன்சிலுக்கான பதவிக்காலம் கடந்த 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்திய அரசியலமைப்பின் 6ஆவது அட்டவணை அந்தந்த மாநிலங்களுக்குள் தன்னாட்சி நிர்வாகப் பிரிவுகளை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த அதிகாரம் லடாக்கின் கார்கில் மற்றும் லே மாவட்டத்துக்கும் உண்டு.
இதற்கான கவுன்சில்கள் பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், கல்வி, நில பயன்பாடு, வரி விதிப்பு ஆகியவற்றில் முடிவுகளை எடுக்கும்.
அதன்படி கார்கில் கவுன்சிலின் தலைவராக தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பெரோஸ் அகமது இருந்தார். இந்த கவுன்சிலின் பதவிக்காலம் முடிவடைந்தததால் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 26 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
கார்கில் மாவட்டத்தில் மொத்தம் 95 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 74,026 ( 77.61%) வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த வாக்குகள் நேற்று (அக்டோபர் 8) எண்ணப்பட்ட நிலையில், தேசிய அளவிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸும், தேசிய மாநாட்டுக் கட்சியும் மொத்தம் 22 இடங்களில் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் 10 இடத்திலும், தேசிய மாநாட்டுக் கட்சி 12 இடத்திலும் பாஜக இரண்டு இடத்திலும் வெற்றி பெற்றன.
இதில் பாஜக வெற்றி பெற்ற ஒரு இடத்தில் காங்கிரஸும் – தேசிய மாநாட்டுக் கட்சியும் தனிதனியாக வேட்பாளரை நிறுத்தியதால் அந்த இடத்தில் இந்த கூட்டணியால் வெற்றி பெறமுடியவில்லை என்றும் அந்த இடத்திலும் சேர்ந்து நின்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்று, பின்னர் இரண்டு பிடிபி கவுன்சிலர்கள் இணைந்ததன் காரணமாக அதன் பலம் 3 ஆக இருந்தது. இம்முறை இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
பாஜக தோல்வி ஏன்?
ஜம்மீ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370ஐ பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதில் ஒன்று லடாக். மாநிலத்தை இரண்டாக பிரித்ததன் காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இணைய சேவை முடக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் பாதிப்படைந்தனர்.
இரு யூனியன் பிரதேசங்களும் தற்போது துணை நிலை ஆளுநரின் நிர்வாகத்தில் உள்ளன.
இந்நிலையில், “மாநிலத்தை இரண்டாக பிரித்து, மாநிலத்தின் அந்தஸ்த்தை ரத்து செய்ததாலயே மக்கள் பாஜகவை நிராகத்துள்ளனர்” என்று தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
லடாக்கின் மாநில அந்தஸ்து மற்றும் கலாச்சாரம், நிலம், வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான சிறப்பு அரசியலமைப்பு உத்தரவாதங்களுக்காகப் போராடும் உள்ளூர் கூட்டணியான கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததும் இந்த வெற்றிக்கு காரணமாக பாரக்கப்படுகிறது.
இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இந்த தேர்தல் முடிவு என்பது கடந்த மாதம் லடாக்கில் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்த பலன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இந்தியா கூட்டணி அமைந்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 7 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 3 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் கார்கில் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. இந்த வெற்றிகள் அடுத்து வரும் 5 மாநில தேர்தல்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்தியா கூட்டணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் என 5 மாநில தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி தேர்தல் வேலையை தீவிரப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா: காரணம் இதுவா?
அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
காசா மாதிரி மாத்திடாதீங்கடா