குமரி: சுரேஷ் ராஜனை முடக்கிய ஸ்டாலின்- தனிக்காட்டு ராஜாவான மனோ தங்கராஜ்

அரசியல்

மாவட்டச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கலில் நேற்று (செப்டம்பர் 22) கன்னியாகுமரி மேற்கு, கிழக்கு ஆகிய இரு மாவட்டங்களுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

குமரி மேற்கு மாவட்டச் செயலாளராக தற்போது பதவி வகிக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த நிர்வாகிகளுடன் அறிவாலயம் சென்று மனு தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக குமரி மேற்கு மாவட்டத்தில் மாசெ பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

அதேநேரம் குமரி கிழக்கு மாவட்டத்தில் தற்போது மாவட்டப் பொறுப்பாளரும், நாகர்கோவில் மேயராகவும் இருக்கும் மகேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு போட்டியாக முன்னாள் விவசாய அணி மாவட்டச் செயலாளரும் சுரேஷ்ராஜனின் ஆதரவாளருமான ஜோசப் ராஜ் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

குமரி கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளரும் முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ராஜன் மீண்டும் மாவட்டச் செயலாளர் தேர்தலில் மனு தாக்கல் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே ஏற்பட்டது. ஆனால் அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி கிழக்கு மாவட்டத்தில் சுரேஷ் ராஜன் மீண்டும் எழுந்து வர இயலாத அளவுக்கு பல்வேறு காய் நகர்த்தல்களை கன கச்சிதமாக செய்து முடித்தார். குமரி கிழக்கு மாவட்டத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் யாரும் எந்த பதவிக்கும் வர முடியவில்லை.

கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ் ராஜன் தலைமையால் அதிரடியாக நீக்கப்பட்டார்.

மார்ச் 4ஆம் தேதி நடந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததை மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான பூச்சி முருகன் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார் ஸ்டாலின். அதுபோல அன்று பிற்பகல் நடந்த துணை மேயர் தேர்தலில் மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ்ராஜன் ஆதரவாளரான ராமகிருஷ்ணன் திமுக போட்டி வேட்பாளராக களமிறங்கி…. காலையில் பாஜக மேயர் வேட்பாளர் மீனாதேவ் பெற்ற அதே 24 வாக்குகள் பெற்றார். இதனால் சுரேஷ் ராஜனுக்கும் பாஜகவினருக்கும் இடையே நடந்த ஒப்பந்தம் வெளியே உடைபட்டது.
துணை மேயர் தேர்தல் முடிந்து கவுன்சிலர்கள் அனைவரும் நாகர்கோவில் மாநகராட்சி வளாகத்தை விட்டு வெளியே வந்ததும் போட்டி வேட்பாளரான ராமகிருஷ்ணனை திமுகவினரே சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்து ஒரு கட்டத்தில் கையையும் வைத்து விட்டனர். அவர்களிடமிருந்து ராமகிருஷ்ணனை போலீஸ் மீட்டு அழைத்துச் சென்றது.

இந்த நிலையில் சுரேஷ் ராஜன் மீது அன்று இரவே கட்சி நடவடிக்கை எடுத்து அவர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேயரும் மனோ தங்கராஜின் ஆதரவாளாருமான நகர செயலாளர் மகேஷை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார் ஸ்டாலின்.

சுரேஷ் ராஜன் பதவி நீக்கப்பட்டு முழுதாக ஏழு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த உட்கட்சித் தேர்தல் அவர் போட்டியிடுவதற்கு தயாரானார். அதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இதை அறிந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் இதுபற்றிய தகவல்களை தலைமைக்கு அனுப்பினார். இந்த நிலையில் சுரேஷ் ராஜன் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று தலைமையில் இருந்து அவருக்கு கூப்பிட்டு சொல்லிவிட்டார்கள். அதனால் மீண்டும் அப்செட் ஆகிவிட்டார் சுரேஷ் ராஜன்.

ஆயினும் தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் மகேஷுக்கு போட்டியாக முன்பு சுரேஷ் ராஜனின் ஆதரவாளராக அறியப்பட்ட ஜோசப் ராஜ் மனு செய்திருக்கிறார். ஆனாலும் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய தற்போதைய பொறுப்பாளரும் மேயருமான மகேஷ் வந்தபோது அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜும் இருந்தார். கூடவே ஆஸ்டினும் இருந்தார். எனவே மகேஷே மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆவார் என்கிறார்கள் குமரி கிழக்கு திமுகவினர்.

சுரேஷ் ராஜனின் குமரி மாவட்ட அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள் திமுக குமரி சீனியர்கள்!

வேந்தன்

ஆவுடையப்பனை அதிர வைத்த அப்பாவு: நெல்லை திமுக க்ளைமேக்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *