குமரி எம்பி சீட்: அண்ணாமலைக்கு எதிராக பொன்னார் நடத்தும் டெல்லி யுத்தம்!

அரசியல்

தமிழக பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சீனியர்கள் அதிருப்தியில் இருப்பது கட்சிக்குள் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்த நிலையில்  சீனியர்களில் முக்கியமானவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனின் சமீபத்திய டெல்லி பயணம்  கட்சிக்குள் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி டெல்லிக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் டிசம்பர் 22 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அதையடுத்து அவர் 24 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும், அதையடுத்து  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா, மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சரபானந்தா சோனோவால் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தை நோக்கி மத்திய அமைச்சர்கள் பலரும் வந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில் பொன்னார் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்திருப்பதும், பிரதமர் மோடியையும், பாஜக தலைவர் நட்டாவையும் சந்தித்திருப்பதும் தமிழக பாஜகவுக்குள் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பொன்னாருக்கு நெருக்கமான கன்னியாகுமரி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம்.

 “கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்னும் நிலுவையில் இருக்கும் திட்டங்களை நிறைவேற்றக் கோரி மத்திய நீர்வழிப் போக்குவரத்து அமைச்சரை சந்தித்திருக்கிறார் பொன்னார். அதற்கான கோரிக்கை மனுவை கொடுப்பதற்குத்தான் டெல்லி சென்றிருக்கிறார்.

அதேநேரம் பிரதமர் மோடியிடம்  21 ஆம் தேதிதான் அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறார் பொன்னார். கேட்டதும் கிடைத்துவிட்டது.  அதையடுத்து உடனடியாக பிரதமரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலைமை உள்ளிட்ட சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. தமிழக பாஜகவில் சீனியர்களுக்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இதன் பிறகுதான் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் பாஜக தலைவர் நட்டாவை சந்தித்தார் பொன்னார்.  மோடியின் கேபினட்டில் ஏற்கனவே பணிபுரிந்தவர் என்ற அடிப்படையிலும் மூத்த பாஜக ஊழியர் என்ற அடிப்படையிலும் பிரதமரை சந்தித்ததில் கூட பலருக்கும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதையடுத்து 24 ஆம் தேதி  தான் மட்டுமே சென்று  பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்ததுதான் தமிழக பாஜகவுக்குள் அதிர்வுகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் 75  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எம்பி, எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட  வாய்ப்பளிப்பதில்லை என்பது  அக்கட்சியின்  ஆட்சிமன்றக் குழுவில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இப்போது 70 வயதாகிறது. ஆனாலும் வரும் மக்களவைத் தேர்தலில் குமரி மக்களவைத் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

அதுமட்டுமல்ல வரும் மக்களவைத் தேர்தலில் பல புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கத் திட்டமிட்டிருக்கிறார் அண்ணாமலை. அந்த வகையில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவரான பால் கனகராஜுக்கு குமரி மக்களவைத் தேர்தலில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.  குமரியை பூர்வீகமாகக் கொண்ட  பால் கனகராஜ் சமீப காலமாக  குமரிக்கு அடிக்கடி வந்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.  மேலும் தற்போதைய நெல்லை  சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரனும் குமரி மக்களவைத் தொகுதியை குறி வைத்து சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

இந்தத் தகவல்களை எல்லாம் அறிந்து அதிர்ந்து போன பொன். ராதாகிருஷ்ணன்,  தனக்கு இந்த வாய்ப்புதான் கட்சி விதிகளின் அடிப்படையில் கடைசி தேர்தல் வாய்ப்பாக இருக்கும் என்பதால் இதை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதனால்தான்  கன்னியாகுமரிக்கான திட்டங்கள் பற்றி மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துவிட்டு…  பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரிடம் தனது தேர்தல் வாய்ப்பு தொடர்பாக முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார்” என்கிறார்கள்.

பொன்னாரின் டெல்லி விசிட்டுக்குப் பின்னால் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான டிக்கெட் யுத்தம் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.

ஆரா

மெஸ்ஸி டாட்டூ: நிரம்பி வழியும் ரசிகர் கூட்டம்!

தென்னிந்திய நடிகர்களுக்கு அங்கீகாரம் இல்லை: நடிகைகள் கவலை!

+1
0
+1
3
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *