ஒவ்வொரு பொங்கல் விழாவின்போதும்… தனது நண்பர்களுக்கும் கட்சியினருக்கும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை அனுப்புவதை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வழக்கமாகவே கொண்டுள்ளார்.
அந்த வகையில் இந்த வருடமும் கனிமொழியின் பொங்கல் வாழ்த்து அட்டை அவரது தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு கோலத்தை வரைந்து அதன் கீழே, ’இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்- கனிமொழி கருணாநிதி’ என்று அந்த அட்டையில் எழுதப்பட்டிருந்தது.
அதை உற்று கவனித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்குள் எவ்வளவு பெரிய அரசியல் பொதிந்திருக்கிறது என்பது புரிந்தது. ஆம்… அந்த கோலம் முழுதும் தமிழ்நாடு என்ற எழுத்துகளால் வரையப்பட்டிருந்தது.
தமிழகம் என்பதை விட தமிழ்நாடு என்பதே பொருத்தமாக இருக்கும் என்று சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் கூறியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்கு எதிர்ப்புகள் கடுமையாக எழுந்தன.
அரசியல் ரீதியாக தனது எதிர்ப்பை தெரிவித்த கனிமொழி, பொங்கல் வாழ்த்திலும் கூட தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் இந்த தமிழ்நாடு கோலத்தை வடிவமைத்து வாழ்த்து அட்டையில் இடம்பெறச் செய்திருந்தார். இந்த, ’தமிழ்நாடு கோலம்’ அனைவரையும் கவர்ந்து சமூக தளங்களில் வைரலானது.
இன்று (ஜனவரி 13) கவிஞர் தாமரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த தமிழ்நாடு கோலத்தைப் பதிவிட்டு, “இந்தக் கோலத்தை வடிவமைத்தது யார் தெரியவில்லை.
யார் என்று தெரிந்தால் நேரடியாக அவருக்கே நன்றி சொல்லிவிட்டு, எத்தனை புள்ளி எத்தனை வரிசை போன்ற விவரங்களைக் கேட்டறிந்து வெளியிட ஏதுவாக இருக்கும். கோல விற்பன்னர்களும் உதவலாம்.
இந்தப் பொங்கல் திருநாளில் நம் வீட்டு வாசல்களில் இந்தக் கோலம் கொலு வீற்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த நாம் தாமரையின் பதிவு பற்றி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியிடம் தெரிவித்து, ‘எத்தனை புள்ளி எத்தனை வரிசை?’ என்று கேட்டோம்.
‘அண்ணாவின் புள்ளி கலைஞரின் வரிசை’ என்று அடுத்த நொடியே தன் தந்தையார் கலைஞரைப் போலவே நயமான பதிலளித்தவர்… சிரித்தபடியே, “ஒவ்வொரு பொங்கலுக்கும் வாழ்த்து எப்படி அனுப்புவது பற்றி கொஞ்சம் நேரம் எடுத்து சிந்திப்பேன்.
இந்த முறை என் மகனின் நண்பர் கோலம் டிசைன் செய்வது பற்றி அறிந்தேன். அவரிடம் தமிழ்நாடு என்பதன் எழுத்துகளை வைத்து கோலம் வடிவமைத்துத் தர முடியுமா என்று கேட்டேன். அதன்படியே வடிவமைத்துத் தந்தார். நன்றாக வந்திருக்கிறது” என்று கூறினார் கனிமொழி எம்பி.
பொங்கல் விழா சீசனில், தமிழ்நாட்டின் உணர்வை, அரசியலை வாழ்த்து மூலமாகவும் பேச முடியும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் கனிமொழி கருணாநிதி.
–ஆரா
365 நாள் 655 நிகழ்ச்சி 9000 கி.மீ பயணம்: முதல்வர் ஸ்டாலின் ஷெட்யூல்!
கோலிக்கு ஆதரவு: ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் வீரர்!