தூத்துக்குடியில் செயல்பாட்டுக்கு வந்த கனிமொழியின் கனவுத் திட்டம்!
செவித்திறன் குறைபாடு என்பது உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. தற்போது 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைப்பாட்டுடன் வாழ்கின்றனர். 2023 ஏப்ரல் முதல் 2024 ஏப்ரல் வரை பதிவு செய்யப்பட்ட தரவுகளில் 25.45% செவித்திறன் குறைபாடு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான குறைபாடுகளைப் போல இல்லாமல், செவித்திறன் குறைபாடு சரியான நேரத்தில் மற்றும் முறையான சிகிச்சையுடன் முற்றிலும் சரி செய்யக்கூடியது தான்.
இதனை பிறப்புக்காலத்தில் கண்டறியப்படாவிட்டால் குழந்தையின் பேச்சு, மொழி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இதனால் பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தடைகள் ஏற்படும்.
அதேவேளையில், இக்குறைபாடு ஆரம்பக்காலத்தில் கண்டறியப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டால் குறித்த நேரத்தில் செவித்திறனைக் கண்டறிதல், குழந்தைகளுக்கு வயது பொருந்தும் பேச்சு மற்றும் மொழி திறன்களை வளர்க்க உதவும். மேலும் அவர்களை வழக்கமான கல்வியில் சேர்க்க உதவும்.
இந்த நிலையில் தான் எம்.பி கனிமொழி, பச்சிளம் குழந்தைகளின் கேட்கும் திறன் பரிசோதனைக்காக “Hearing for Life” என்ற முன்னோடி திட்டத்தை கடந்த 6ஆம் தேதி தனது சொந்த தொகுதியான தூத்துக்குடியில் துவக்கி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறையை உருவாக்கி மாற்றுத்திறனாளிகள் சுயமரியாதை – சமூகப் பாதுகாப்புடன் வாழ பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.
அவரது வழியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் செவிப்புலன் பரிசோதனைக்கான முன்னோடி திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷணன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், செவித்திறன் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சேவைகள் துறை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
செவித்திறன் குறைபாடு இல்லாத மாநிலம் என்ற இலக்கை அடைவதை நோக்கமாக கருதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புதிதாகப் பிறந்த அனைத்து குழந்தைகளும் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் 2000 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பரிசோதனை மேற்கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் டிஜிட்டல் பதிவுகள் பராமரிக்கப்படும். தொடர் பரிசோதனை தேவைப்படும் பட்சத்தில் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை முறைகள் என்னென்ன?
செவித்திறன் பரிசோதனையானது ஓட்டோ அகவுஸ்டிக் எமிஷன்ஸ் (OAE) மற்றும் ஆடிட்டரி ப்ரைன்ஸ்டெம் ரெஸ்பான்ஸ் (ABR) என்ற ஜெர்மன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கருவிகள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பின் தீவிரத்தின் அடிப்படையில் கேட்கும் கருவிகள் வழங்கப்படும். கருவிகள் கொடுக்கப்பட்ட பிறகு உடனடியாக பேச்சு மற்றும் மொழி சிகிச்சை தொடங்கப்படும்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தலைமையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடி திட்டம் விரைவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆறு நாட்களில் ஆயிரம் கோடி : பிரபாஸ், ஷாரூக் பட வசூலை மிஞ்சிய புஷ்பா 2
ஸ்டாலின் வந்தல்லே… வைக்கம் வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ – கேரளாவில் வேலு செய்த முக்கிய வேலை!