kanimozhi speaks on non confidence motion

கண்ணகி கோபத்தால் சரிந்த  பாண்டியன் செங்கோல் தெரியுமா? -மக்களவையில் கனிமொழி ஆவேசம்! 

அரசியல்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்காததால், அவரை பேச வைப்பதற்காக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான விவாதத்தில் நேற்று (ஆகஸ்டு 9) திமுக சார்பில் மக்களவை திமுக துணைத் தலைவரான கனிமொழி பேசினார்.

அப்போது அவர், “ஒரு மாநிலத்தைக் காப்பாற்ற நீதித்துறை தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசுக்கு வெட்கக் கேடான செயல் இல்லையா? ஒன்றியத்திலும் பாஜக அரசு மாநிலத்திலும் பாஜக அரசு என்பதை டபுள் இன்ஜின் அரசு என சொல்லிக் கொள்ளும் பாஜக இதை மணிப்பூரிலும் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டது. ஆனால், இந்த டபுள் இன்ஜின் அரசு டபுள் எட்ஜுடு அதாவது இரு முனையிலும் கூரான ஆயுதமாக மணிப்பூரை தாக்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல இரட்டைப் பேரழிவு, இரட்டை முடக்கம்  என்ற நிலையில் மணிப்பூரைக் கொண்டு சென்றிருக்கிறது.

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிரதமர் மோடி அரிதான நிகழ்வாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் நாடாளுமன்றத்துக்கு உள்ளே வந்து மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பேச மறுக்கிறார்.

மூன்று மாதங்களாக நடக்கும் இந்த கலவரத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மணிப்பூர் மாநில முதல்வரிடம் கேட்டால், ‘இரண்டு சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.  அரசு தந்தையை போல செயல்பட்டு இருதரப்புக்கும் இடையே பேசிக் கொண்டிருக்கிறது’ என்கிறார்.  இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

மணிப்பூரில் இரு பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட அந்த வீடியோதான் தேசத்தின் மனசாட்சியையும் உலகத்தின் மனசாட்சியையும் ஒரு சேர உலுக்கியது. 21 வயது இளம்பெண்ணின் தந்தையும், சகோதரரும் அவளைக் காப்பாற்ற போராடியபோது கொல்லப்பட்டனர். வன்முறை கும்பல் அந்த குடும்பத்தை பிடித்தபோது அந்த குடும்பத்தினர்  அங்கிருந்த போலீஸ் ஜிப்சியை நோக்கி ஓடியிருக்கிறார்கள்.

அவர்கள் போலீஸ்காரர்களிடம், ‘எங்களை போலீஸ் ஜிப்சியில் ஏற்றி எங்காவது பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட்டுவிடுங்கள்’ என்று பிச்சையெடுப்பதைப் போல போலீசாரிடம்  கெஞ்சியிருக்கிறார்கள். ஆனால் போலீஸ் அந்த குடும்பத்தினருக்கு உதவ மறுத்துவிட்டது . மாறாக அந்த பெண்ணை வன்முறை கும்பலிடமே ஒப்படைத்திருக்கிறது  போலீஸ். அதன் பிறகுதான் அந்த பெண்ணின் தந்தையும் கொல்லப்பட்டார், சகோதரரும் கொல்லப்பட்டார்.

மணிப்பூர் மாநில போலீஸ், மணிப்பூர் மாநில மகளிர் ஆணையம்,  தேசிய மகளிர் ஆணையம் என எல்லா அமைப்புகளும் மௌனமாக இந்த கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த வீடியோ மட்டும் வெளியாகாமல் போயிருந்தால் இந்த கொடுமைகளை எல்லாம் ஒன்றுமே நடக்காதது போல் மூடியிருப்பார்கள்.

இங்கே பேசிய உறுப்பினர்கள் மகாபாரதத்தில் வரும் திரௌபதியை சுட்டிக் காட்டிப் பேசினார்கள். மணிப்பூர் பெண்களும்  அதேபோல தங்களைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் வேண்டினார்கள். கடவுளும் உதவ வரவில்லை, அரசும் வரவில்லை. மகாபாரதத்தை ஒழுங்காக படித்தவர்களுக்கு தெரியும்… திரௌபதி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மட்டுமல்ல, அதைப் பார்த்துக் கொண்டு மரம் போல நின்றிருந்தவர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.  மணிப்பூர் விவகாரத்தில் மட்டுமல்ல ஹத்வாஸ், உனாவ், பில்கிஸ் பானு, ஏன் சமீபத்தில் போராடிய மல்யுத்த வீராங்கனை விவகாரம் வரை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களை இந்த தேசத்தின் தாய்மார்கள் தண்டிப்பார்கள்.

மணிப்பூரில் நூற்றுக்கணக்கான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் உணவு இல்லை, தண்ணீர் இல்லை, ஒவ்வொரு முகாமிலும் அளவுக்கு அதிகமான மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், முறையான சுகாதார கழிவறை வசதி இல்லை. கூரைகள் ஒழுகுகின்றன. குழந்தைகள் பயத்திலும், பசியிலும் கதறிக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பெயர்தான் நிவாரண  முகாம்களா? இன்னமும் நீங்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதையே உணரவில்லை. மக்களைச் சென்றடையவே இல்லை.

முகாமிலே ஒரு பெண், ‘என் மகன் கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள். அவன் உடலை இதுவரை நான் பார்க்கவில்லை. அவன் கொல்லப்பட்டிருப்பான் என்று நான் நம்பவில்லை. என்னைப் பார்க்க என்றாவது ஒரு நாள் வருவான்’  என்று நம்பிக்கையாகக் காத்திருக்கிறார். இந்த ஒரு அம்மா மட்டுமல்ல… இவரைப் போன்ற ஏராளமான அம்மாக்கள் தங்கள் சகோதரரோ, கணவரோ, மகனோ திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.

நீங்கள் நாடாளுமன்றத்தில் செங்கோலைக் கொண்டு வந்து வைத்துள்ளீர்கள். சோழர்களின் செங்கோல் என்றும் சொல்லிக்  கொள்கிறீர்கள். நீங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை முறையாக அறியவில்லை.   சாமானியர்களின் கோபத்தால் சரிந்த பாண்டியன் செங்கோல் பற்றி அறிவீர்களா? கண்ணகியின் கோபம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?  இந்தி திணிப்பை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை ஒழுங்காக படியுங்கள். அது பல பாடங்களை உங்களுக்குக் கற்றுத் தரும்” என்று ஆவேசமாக பேசினார் கனிமொழி.

வேந்தன்

HACT2023: அனல் பறந்த ஆட்டம்… பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!

டிஜிட்டல் திண்ணை: ‌ED போட்ட கிடுக்கிப் பிடி… என்ன சொன்னார் செந்தில் பாலாஜி?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *