“ஒரு சில இடங்களில் சில நல்ல மனிதர்களும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் ராஜ்நாத் சிங்” என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
அருந்ததியர் சமுதாயத்திற்கு மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தற்கு திமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆதித்தமிழர் பேரவை கட்சியின் தலைவர் அதியமான் ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
கனிமொழி பேசும்போது,
“கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு சார்பில் தான் வெளியிடுவார்கள். வேறு யாரும் வெளியிட முடியாது. அதனால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஒரு சில இடங்களில் சில நல்ல மனிதர்களும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் ராஜ்நாத் சிங். அவர் மனம் திறந்து கலைஞரைப் பற்றி பேசினார், பாராட்டினார்.
உடனே பாஜகவிற்கும், திமுகவிற்கும் ஒரு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறதா என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். தொடர்ந்து பாஜகவை எதிர்க்கக்கூடிய முதல் குரல் தமிழக முதல்வர் ஸ்டாலினுடைய குரல் தான். அந்தக் குரலை, அந்த எதிர்ப்பை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசுடன் இணைந்து போகக்கூடியவரா ஸ்டாலின்?
தமிழர்களின் உரிமைகளை ஒடுக்கட்டப்பட்டவர்களின் உரிமைகளை நீதிமன்றத்திற்கு சென்று உங்களுக்கான நீதியை நமது முதல்வர் பெற்றுத்தந்திருக்கிறாரோ, அதேபோல ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக ஸ்டாலின் தொடர்ந்து போராடுவார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…