திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி இன்று (ஜனவரி 5) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன்பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் கட்சியினருடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக சென்னை சங்கமம் கலைக்குழுவினரோடு கேக் வெட்டி நேற்று இரவு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
கலைஞரின் மகள் என்ற போதிலும் கலை, இலக்கியம் மற்றும் அரசியல் என பல்வேறு துறைகளில் தனது ஆளுமையை டெல்லி வரை உணர்த்தி வருபவர் கனிமொழி.
அரசியல் பயணத்தில் கனிமொழியின் குறிப்பிடத்தக்க சாதனைகள் :
தனது தந்தையைப் போலவே இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள கனிமொழி, இதுவரை கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய கவிதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் தொடங்கி வைத்த “சென்னை சங்கமம்” என்ற நிகழ்ச்சியை தற்போதும் கனிமொழி முன்னின்று நடத்தி வருகிறார்.
கடந்த 2007 ஆம் நடந்த மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் கனிமொழியின் பெயர் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின்னர் மீண்டும் 2013ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் சிறப்பாக பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததாகவும் கூறி சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதினை கடந்த 2018 ஆம் ஆண்டு கனிமொழி பெற்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முறையாக நேரடி தேர்தல் களத்தில் நின்று தூத்துக்குடி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது முதல் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜனை 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2024ல் நடைபெற்ற தேர்தலிலும் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட கனிமொழி, முந்தைய தேர்தலை விட இன்னும் அதிகமாக 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvs AUS : பார்டர் கவாஸ்கர் கோப்பையுடன்… கனவையும் தொலைத்த இந்தியா
’இது தோழமைக்கு இலக்கணம் அல்ல’ – கே பாலகிருஷ்ணனுக்கு திமுக பதில்!
பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை… சொந்த ஊருக்கு செல்ல தயாராகும் பொதுமக்கள்!